மகளின் பள்ளிக்கட்டணம் பலரின் பசிக்கு உதவுகிறது!

 பலருக்கு  பசியாற்றிய இயக்குநர்!

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் ‘காவல்’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குநருமான V.R.நாகேந்திரன்.

சில தினங்களாகவே இவர், தான் வசிக்கும் பகுதியில் பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி பலரும் இவருடன் இணைந்து இந்த சேவையில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுபற்றி இயக்குநர், நடிகர் V.R.நாகேந்திரன் கூறுகையில், “ஒரு நாள் என் வீட்டு வாசலில் இரண்டு நபர்கள் வந்து உணவு கிடைக்குமா என கேட்டனர், கொடுத்தேன். இந்த ஊரடங்கு காலத்தில் சிலர் உணவை கேட்டு பெறுகின்றனர் ஆனால் பலர் யாரிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் பசியால் வாடுகின்றனர்.

தினமும் என்னால் முடிந்த அளவு பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. யாரிடமும் உதவியை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் துவங்க நினைத்தேன்.

என் மகளின் பள்ளி செலவுகாக வைத்திருந்த தொகையை வைத்து சென்னை அசோக் நகரில் நான் வசிக்கும் இடத்தில் ‘பசித்தவர்கள் எடுத்து கொள்ளலாம்’ என்ற பலகை போட்டு உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு தினமும் காலை 8 முதல் 8.30 வரை, மதியம் 1 முதல் 1.30 வரை கொடுத்து வந்தேன்.

இந்த விஷயத்தை அறிந்து என் இயக்குநர் சுசி கணேசன், மற்ற இயக்குநர்கள் லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ், என் நண்பர்கள், என் அடுக்கு மாடி குடியிருப்பின் செயலாளர் உள்ளிட்ட பலர் அவர்களது பங்களிப்பு இந்த நற்செயலில் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு நிதியுதவி அளித்தனர். இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் என்னை ஊக்குவித்தனர்.

50 உணவு பொட்டலங்களாக ஆரம்பித்த இந்த செயல் தற்போது 400 பொட்டலங்களை எட்டியுள்ளது. தூய்மை பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், துணை இயக்குனர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் என பலரும் இந்த உணவு பொட்டலங்களை தினம் எடுத்து செல்வதை பார்க்கையில் உள்ளத்தில் ஒரு ஆனந்த பூரிப்பு ஏற்படுகிறது” என்றார்.

மேலும், “தமிழக அரசு அனைத்து தேவையான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில் நாமும் நம்மால் இயன்ற உதவிகளை இல்லாதவருக்கு செய்வோம். கொரோனா என்னும் சங்கிலியை உடைத்தெறிவோம். உதவி என்னும் சங்கிலியை தொடர்வோம்” என்று V.R.நாகேந்திரன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here