கோலாலம்பூர்: அந்நியத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கான பல பிரிவுகளைச் சேர்ந்த லெவி அமலாக்க ஒத்திவைப்பை அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி வரை நீட்டிக்க மனிதவள அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த பல பிரிவு லெவி அமலாக்கம் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த ஒத்திவைப்பு கால அவகாசத்தை நீட்டிக்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக மனித வள அமைச்சர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார். கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் இன்னமும் முழுவதுமாய் முறியடிக்கப்படாததால் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சுகாதார, பொருளாதார நெருக்கடிகளை அரங்சாங்கம் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளது.
இந்தத் தொற்றுப் பரவல் முதலாளி தரப்பினர் உட்பட தொழில் துறைக்குப் பெரும் தாக்கத்தை அளித்துள்ளது எனவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தொழில்துறையின் தேவைகளின் அடிப்படையில் அந்நியத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கான பல பிரிவுகளைச் சேர்ந்த லெவி அமலாக்க அம்சங்கள் குறித்து தாம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் சரவணன் தெளிவுபடுத்தியுள்ளார்.