தேசியத்தில் தேசியம் இல்லையே!

அது , இல்லாதவரை நம் தலை  நிமிராது!

எந்தவொரு விளையாட்டுத்துறையாக இருந்தாலும் தேசிய அளவில் நாட்டைப் பிரதிநிதிக்கும்போது தேசியத்தில் தேசியம் பிரதிபலிக்க வேண்டும். அனைத்து இனப் பங்கேற்பாளர்களின் கலவையாக தேசியம் பளிச்சிட வேண்டும்.

நாட்டில் கால்பந்துத்துறை உலக அளவில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. அது ஒரு பொற்காலம் – வரலாறுகள் தடம் பதித்திருக்கின்றன. இன்றும் அதன் பெருமையில் நாம் திளைத்திருக்கிறோம்.

இன்றளவும் சோ சின் ஆன் பற்றிப் பேசுகிறோம். மொக்தார் டஹாரியின் பெருமைகளை வாய்வலிக்கப் பேசி மகிழ்கின்றோம். ஆறுமுகத்தின் உலகளாவிய புகழை உளமார நினைவில் கொண்டு மகிழ்கிறோம். சந்தோக் சிங் பற்றி தெரியாதவர்கள் யாரும் உண்டோ?

கோல் காவலில் ஸ்பைடர் மேன் ஆர். ஆறுமுகம், உலக ஜாம்பவான் தென் கொரியாவை மிரள வைத்தவர். கேப்டன் சோ சின் ஆன் – திடலில் விளையாட்டாளர்களை செம்மையாக வழி நடத்தி வெற்றிகள் குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.

சந்தோக் சிங் – பாதுகாப்புச் சுவர். சீனப் பெருஞ்சீவரைவிட வலிமைமிக்கது இவரது தற்காப்பு ஆட்டம். மொக்தார் டஹாரி – கோல் மன்னன். இவரது உதையில் பந்து பீரங்கியில் இருந்து சீறி வெளியேறும் குண்டுகள் போன்று மின்னல் வேகத்தில் எதிரியின் கோல் வலைக்குள் நுழையும்.

இந்த வரலாற்று நாயகர்களின் வீர சாகசங்கள் இனம், மதம், வர்ணம் எல்லைகள் கடந்து அனைத்து மலேசியர்களின் நினைவலைகளில் இன்றளவும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன. எல்லா விளையாட்டுகளிலும் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சீக்கியர்கள் என்று அனைத்து இனத்தவர்களும் இருந்தனர் – பங்கேற்றனர், வெற்றிகள் குவிந்தன. உலக அரங்கில் மலேசியாவின் கொடி கம்பீரமாகப் பறந்து நெகாராகூ தேசிய கீதம் இசைக்கப்பட்டு காற்றில் கலந்தது.

அன்று தேசியம் என்பதில் ஓர் அர்த்தம் இருந்தது. தேசியம் பல இனங்களின் கலவையால் பிரதிபலிக்கப்பட்டது.

நாட்டில் இன்று விளையாட்டுத் துறையில் என்னதான் நடக்கிறது? குறிப்பாக தேசிய ஹரிமாவ் கால்பந்து அணியின் தொடர் தோல்விகளுக்கு யார் காரணம்? என்ன காரணம்?

துபாயில் நடைபெற்ற உலகக் கிண்ண தேர்வாட்டங்களில் ஹரிமாவ் மலாயாவின் தோல்விகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்று அந்நிய நாட்டு விளையாட்டாளர்கள் அனுமதிக்கப்பட்டனரோ அன்றில் இருந்து வெற்றி என்பது எட்டாக் கனியாக இருக்கிறது.

 யாரை நொந்து கொள்வது என்று முன்னாள் அனைத்துலக கால்பந்து ஜாம்பவான் டத்தோ சந்தோக் சிங் குமுறினார்.

நம்முடைய அணியில் வெளிநாட்டு விளையாட்டாளர்கள் தேவையா? நம் இளைஞர்களால் விளையாட முடியாதா அல்லது அந்தத் தகுதியும் திறனும்தான் அவர்களிடத்தில் இல்லையா?

ஹரிமாவ் மலாயா தேசியக் கால்பந்து அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஆட்டக்காரர்களிடம் அப்படி என்ன திறமை  இருக்கிறது?

நம் ஆட்டக்காரர்களைவிட இவர்களுக்குப் பெரிய சம்பளமும் சிறப்பு அனுகூலங்களும் கொட்டித் தரப்படுகின்றன. ஆனால் முடிவில் நாடே தலைகுனிய வேண்டி இருக்கிறதே!

கொங்சியில் உள்ள சீனப் பையன்களும் கம்பத்து மலாய் இளைஞர்களும் தோட்டத்து இந்திய இளைஞர்களும் மாட்டுப்பண்ணை சீக்கிய ஆட்டக்காரர்களும் நாட்டை உலக அளவில் பேச வைத்தனரே!

இந்தப் படுமோசமான தோல்விகளுக்கு எல்லாம் மலேசிய கால்பந்து சங்கம் (எஃப்ஏஎம்) என்ன சொல்லப் போகிறது? காரணங்கள் தயாராக இருக்கின்றனவா?

ஒரு வெற்றியைக்கூட கொண்டாட முடியவில்லையே. மெர்டேக்கா கிண்ண கால்பந்துப் போட்டிகளின்போது மெர்டேக்கா அரங்கம் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது இன்றும் நினைவுகளில் பசுமையாக இருக்கிறதே.

விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை தேசியக் குழுவில் தேசியம் பிரதிபலிக்கவில்லை என்றால் நம் தலை நிமிரப் போவதில்லை. இது சத்தியம் – உண்மை.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here