கடல் அலையில் சிக்கியவர்களைக் காப்பாற்ற டிரோன்கள்

ஸ்பெயினில் புது முயற்சி!

மிஜாஸ்:
ஸ்பெயின் நாட்டில் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடும் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் பணியில் ஆளில்லா குட்டி விமானங்களான டிரோன்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
மெடிட்டெரேனியன், அட்லாண்டிக் ஆகிய சமுத்திர கரைகளில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். அந்த நாட்டின் கடற்கரை பகுதிகளின் மொத்த நீளம் 8,000 கிலோ மீட்டராகும்.
இங்கு பொழுதை செலவிட வரும் மக்கள் ஆர்வம் மிகுதியால் கடலில் இறங்கி ஆபத்தில் சிக்கிக் கொள்வது அடிக்கடி ஏற்படும் நிகழ்வு. இவர்களை காப்பாற்றும் பணியில் அவசரகால மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடல்நீரில் தத்தளிக்கும் ஒருவரை சென்றடைய அவர்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும் நிலையில், பல்வேறு தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி வந்தது. இந்நிலையில், அலைகளில் சிக்கியவர்களை மூழ்காமல் காக்கும் பணியில் தற்போது டிரோன்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
அவசர சூழல்களில் டிரோன்கள் கடலில் தத்தளிப்பவர்களுக்கு காற்றுப்பைகளைக் கொண்டு சேர்க்கிறது. இந்த பைகளின் உதவியுடன் அவர்கள் மூழ்காமல் நீரில் மிதப்பதால் சற்று தாமதமானாலும் பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் மீட்டுவிட முடிகிறது.
சுமார் 8 கிலோ எடையுள்ள இந்த அவசரகால டிரோன், கடலில் 8 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதுடன், ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் 45 நிமிடம் தொடர்ச்சியாக பறக்கக்கூடியது. தனது வழியில் உள்ள படகுகள், கட்டுமரங்களை விட்டு விலகி செல்லக்கூடிய வகையில் டிரோனில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கரையில் இருந்து பேசினால் அதனை ஒலிக்கக்கூடிய வகையில் சக்தி வாய்ந்த ஸ்பீக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மிலாக்கா பகுதியில் உள்ள 5 கடற்கரைகளில் அவசரகால உதவி பணிகளில் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here