மக்கள் நலன்- முழுமையானதாக இல்லை!
கோவிட்-19 தொற்றுப் பரவல் மோசமான விளைவுகளைச் சமாளிப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கின்ற நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை ஒரு போராட்டக் களமாக மாறி இருக்கிறது.
வெள்ளைக் கொடி பறக்க விடும் திட்டம் மத்திய அரசாங்கத்தின் செயலற்றதன்மையைப் பிரதிபலிக்கிறது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி சாடினார்.
அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் தன்னுடைய சொந்தப் பிரஜைகளின் நலன்களைக் காப்பதில் தோல்வி கண்டிருக்கிறது. நெருக்கடிமிக்க ஒரு காலகட்டத்தில் அவர்களைக் கைவிடும் அளவுக்கு அரச்சாங்கம் அதன் நடவடிக்கைகளில் தோல்வி கண்டிருக்கிறது.
உதவிகள் தேவைப்படும் ஒரு நெருக்கடிமிக்க காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதில் அரசாங்கத்தின் தோல்வியைக் கண்ட மக்கள் மீது அக்கறை கொண்ட சிலர் வெள்ளைக் கொடியைப் பறக்க விடும் திட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
இந்த வெள்ளைக் கொடி எங்கு பறக்கின்றதோ அங்கு உணவுப் பொருட்கள் விரைகின்றன. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம் என்ற சமூக உணர்வோடு இந்த வெள்ளைக் கொடி பிரச்சாரம் உயிர் பெற்றிருக்கின்றது.
கோவிட்-19 தொற்றுப் பரவலைச் சமாளிக்க முடியாத ஒரு செயலற்ற அரசாங்கமாக பெரிக்காத்தான் நேஷனல் மாறி வருகிறது. இங்கு அரசாங்கத்தின் செயலற்ற தன்மை, தொற்றுப் பரவல் ஏற்படுத்தி இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்வதற்கு இதுபோன்ற வெள்ளைக் கொடி இயக்கம் அவசியமாகிறது என்பதையே நடப்புச் சுழல் தெள்ளத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் அதன் கடமையையும் பொறுப்புகளையும் உண்மையாக, நேர்மையாக செய்திருக்குமேயானால் இந்த வெள்ளைக் கொடி விவகாரம் தலைதூக்கி இருக்காது.
கோவிட்-19 தொற்றுப் பரவல் மோசமான ஒரு நிலையை எட்டி மக்களுக்கு வாழ்வா? சாவா என்ற உயிர் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தொற்றுப் பரவலைச் சமாளிக்கத் தவறிய அரசாங்கத்திற்குத் தங்களுடைய அவநம்பிக்கையைக் காட்டுவதற்குரிய ஒரு வழியாகவும் இந்த வெள்ளைக்கொடி விவகாரம் பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
நிலைமை படுமோசமான நிலையை எட்டியிருக்கின்ற நிலையில் உடனடி உதவிகளுக்கு தங்களின் வீட்டின் முன் வெள்ளைக் கொடியைப் பறக்க விடுங்கள். அடுத்த நொடியில் உதவிகள் வீட்டு வாசலை வந்தடையும் என்ற இயக்கம் தற்போது நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது.
கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் அதனால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கிறது என்று சொல்லப்படுவதில் பொய்யும் புரட்டும்தான் விஞ்சி நிற்கின்றது.
ஆனால், அதன் தாக்கம் சாதாரண மக்களின் வாழ்க்கையைச் சுறையாடிப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கொடுந்தொற்றால் சாமானிய மக்கள் சொல்ல முடியாத துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
வேலை இழப்பு, வருமானம் பாதிப்பு, தொழில்துறையில் முடங்கிக் கிடக்கின்றனர். கோவிட்-19 தொற்றுப் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மரண எண்ணிக்கைகளும் மிரட்டி வருகின்றன.
மலேசியர்கள் இன்றைய நிலையில் எதிர்கொண்டிருக்கும் சிரமங்களை இந்த அரசாங்கம் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறதா? இல்லையா என்பது தெளிவுபடத் தெரியவில்லை என்று பேராசிரியர் இராமசாமி குறிப்பிட்டார்.