அந்த கறுப்பு வேறு -இந்தக் கறுப்பு வேறு

மலேசிய மருத்துவர் சங்கம் விளக்கம்

கோலாலம்பூர்-

கறுப்புக்கொடி இயக்கத்திற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் முனியாண்டி நேற்று தெரிவித்தார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தக் கறுப்புக்கொடி இயக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் விவரித்தார்.

நாங்கள் அண்மையில் தொடங்கிய இயக்கம் தொடர்பிலும் இந்தக் கறுப்புக்கொடி இயக்கம் தொடர்பிலும் சில தரப்பினருக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கக்கூடும். ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதரவாக மலேசிய மருத்துவர் சங்கம் கறுப்புக் குறியீடு, கறுப்புத் திங்கள் எனும் இயக்கங்களை மேற்கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

ஆகவே, யாரும் இதனை அரசியலாக்கிவிட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக மலேசிய மருத்துவர் சங்கம் ஜூலை முதல் தேதி தொடங்கி ஜூலை 12ஆம் தேதி வரையிலும் கறுப்புக் குறியீடு எனும் இயக்கத்தையும் ஜூலை 12ஆம் தேதி கறுப்புத் திங்கள் என்ற இயக்கத்தையும் நடத்துகிறது என்று அவர் சொன்னார்.

சுமார் 23 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்களை அரசாங்கம் நிரந்தரச் சேவையில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் அந்த ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிரந்தரமாக்கப்படுவதால் அவர்கள் சமச்சீரான சம்பளத்தையும் மற்ற சலுகைகளையும் பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here