சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

புத்ராஜெயா, ஜூலை 8:

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தச் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டமானது உணவகம், சரக்கு, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, துப்புரவு போன்ற இணை சேவைப் பணிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தவிர இந்தத் திட்டமானது சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த மாநிலங்களின் அரசின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் அங்கு செயல்படுத்தப்படும். இந்நிலையில் மலேசிய குடிநுழைவு இலாகாவினரால் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களின் உறுதி தணிக்கைக்குப் பிறகு இந்தத் திட்டத்திற்கான எண்ணிக்கை (கோட்டா) உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அதனை அடுத்து இந்த உறுதிப்படுத்தும் செயல்பாடுகளில் தேர்வுபெற்ற சட்ட விரோத அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் முதலாளிகள் www.fwcms.com.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். எனவே இனி அவர்கள் www.eppax.gov.my என்ற அகப்பக்கத்தில் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. இந்தக் கோட்டா உறுதிப்படுத்தும் செயல்பாடுகளை மனித வள அமைச்சு, பாதுகாப்பு மேலாண்மை இலாகாக்கள் முன்னெடுக்கும் என அமைச்சின் அறிக்கையில் தகவல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here