வாடகை செலுத்த வழியில்லை காரில் மூன்று இரவுகளைக் கழித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர்.

சாந்தி ராஜன்- மக்கள் ஓசை செய்தியாளர்.

லாருட், ஜூலை 9 :

செலாமா, தாமான் மாவார் லெஸ்தாரி வீடமைப்புப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உறவுகள் ஒரு காரில் நெருக்கச் சூழலில் மூன்று நாள் இரவை கழிக்க நேர்ந்த சோக சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்து சோகம் அடையச் செய்தது.

38 வயது சலிஷா அமாட், அவரின் 43 வயது கணவர் முகமட் ஹஸ்ரூல் ஹரிஸ், 2 – 15 வயது இடைப்பட்ட ஐந்து செல்வங்கள் தங்களின் புரோட்டோன் வீரா காரை தற்காலிக தங்கும் இடமாக மாற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

“லோரி ஓட்டுநராக இருந்து வந்த என் கணவர் உடல் ஊனம் மற்றும் மனநோய் பாதிப்பின் காரணமாக கடந்த இரண்டு வருடம் வேலை செய்யாமல் இருந்து வந்தார். நான்தான் குடும்பத்தை கவனிக்க நேர்ந்தது” என சலிஷா அமாட் வேதனையுடன் சொன்னார்.

கோலசிலாங்கூரிலிருந்து என கணவர் வாழ்ந்த இங்குள்ள உலு மெங்குவாங் கிராமத்திற்கு மாற்றலாகி வந்ததும் ஒரு வருடத்தில், பிரச்சினை எங்களைச் சூழ்ந்தது.

எல்லாரின் நன்மை கருதி கடந்த வியாழக்கிழமை நாங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம் என்ற அவர் ஆற்றில், பெட்ரோல் நிலைய கழிப்பறைகளில் குளித்தோம் என்று அவர் குறிப்பிட்டார்.

வேறு வழி தெரியாமல் என் கணவர், பிள்ளைகள் காரிலேயே தூங்க வேண்டியதாயிற்று என்றதும் அவர் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது.
எனினும் உரிய நேரத்தில் உதவி செய்து தங்க இடம் கொடுத்த நல்லுள்ளங்களை புகழ்ந்து, கெஅடிலான் கட்சி செலாமா அலுவலக அதிகாரிகளை வெகுவாகப் பாராட்டினார்.

இதனிடையே , கெஅடிலான் கட்சி தகவல் பிரிவுத் தலைவரும் உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினருமான முகமட் அராபாட் வரிசை முகம்மது இக்குடும்பத்திற்குத் தேவையான உதவி வழங்கி பி.கே.ஆர். செலாமா அலுவலக அறையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட தகவலை தெரிவித்தார்.

புதன்கிழமை தொடக்கம் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் ஐநூறு வெள்ளி வீதம் மூன்று மாதங்களுக்கு வாடகை செலுத்தும் செலவினை தமது தரப்பு ஏற்று கொண்டதாகவும் அவர் சொன்னார்.
அதேவேளையில், சமையல் பொருட்கள் மற்றும் எழுவரின் பிற தேவைகளைப் பூர்த்தி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here