ஆரோக்கியமான அரசியலின் தொடக்கம்

 

வெற்றியின் படியில் விவேக முடிவு!

நாட்டில் கோவிட்-19 கொடுந்தொற்றுப் பரவலை முறியடித்து கட்டுப்படுத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் ஓர் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளது.

ஆரம்பத்திலேயே இதனைச் செய்திருக்க வேண்டும். ஆனால், காலம் கடந்தாலும் மிகச் சரியான ஒரு காலகட்டத்தில் அதன் உருமாறிய செயலாக்கம் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

கோவிட்-19 கொடுந்தொற்று கோரத்தாண்டவத்தை அடித்து நொறுக்கி மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் மலேசிய தேசிய கோவிட்-19 மீட்சித் திட்டத்தை தற்போது தொகுத்து வருகிறது.

வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். இதனை வகுத்து, தயாரிக்கும் பொறுப்பை நிதியமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் ஏற்றிருக்கிறார்.

இந்தத் தேசிய கோவிட்-19 மீட்சித் திட்டம் ஒரு தரப்பின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் மட்டும் கொண்டிருக்கக்கூடாது. எதிர்க்கட்சிகள் உட்பட அரசு சாரா இயக்கங்கள் துறைசார்ந்த அமைப்புகள், வர்த்தகச் சபைகள் ஆகிய தரப்புகளின் கருத்துகளும் பரிந்துரைகளும் காலத்தின் கட்டாயம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ஜசெக தலைமைச் செயலாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங், பிகேஆர், சபா – சரவாக் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாட்டின் இதர எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் தெங்கு ஸஃப்ருல் சந்தித்து இருக்கிறார் – தொடர்ந்து சந்தித்தும் வருகிறார்.

இவர்கள் முன்வைத்த கருத்துகளும் பரிந்துரைகளும் உண்மையாகவும் நேர்மையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கின்றன என்பதை நிதி அமைச்சரே ஒப்புக்கொண்டிருப்பது ஓர் ஆரோக்கியமான அரசியல் பாணியைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

அவர்கள் முன்வைத்த ஒவ்வொரு கருத்தும் பரிந்துரையும் பிரமிக்க வைக்கிறது. இன்றைய சுழலுக்கு ஏற்புடையதாகவும் உள்ளது. நாடு, நாட்டு மக்களின் நலன் காக்கும் பரிந்துரைகளாகவும் இருப்பதில் மகிழ்ச்சி கொண்டிருக்கும் இவ்வாறான சந்திப்புகள் இத்துடன் முற்றுப்பெற்றுவிடாது தொடர வேண்டும் என்ற தமது மனவோட்டத்தை நிதி அமைச்சர் பதிவு செய்திருக்கிறார்.

அவரின் இந்த மனம் திறந்த ஒப்புதல் நல்லதுக்காக எல்லாரும் ஒன்றுபடலாம் என்பதைத் தெளிவுபட பறைசாற்றி இருக்கிறது.

அதேசமயத்தில் அனுதினமும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும் கவனித்தும் வரும் முன்களப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரையும் நிதி அமைச்சர் சந்தித்திருக்கிறார்.

இதன்மூலம் இவர்கள் எதிர்நோக்கும் மாறுபட்ட சவால்களும் அரசாங்கத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு நெருக்கடியில் இருந்து மலேசியா முழுமையாக மீட்சிபெற வேண்டும். அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு தெங்கு ஸஃப்ருல் களமிறங்கி இருக்கிறார் – புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறார்.

அரசாங்கத்திற்கு என்ன தேவையோ அதனை இவர்கள் அனைவரும் தந்திருப்பது இந்தத் தேசிய மீட்சித் திட்டம் விரைந்து முழுமை பெற்று அமல்படுத்தப்படுவதற்குப் பெரும் உந்துசக்தியாக விளங்கும் என்பது திண்ணம்.

இச்ந்திப்புகளின்போது அரசாங்கத்தைப் பற்றி ஆக்கப்பூர்வமான குறைகள் சொல்லப்பட்டிருப்பதை அமைச்சர் திறந்த மனத்துடன் வரவேற்றிருப்பது செயலில் மட்டுமே அவர் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார் என்பது  மிகத்தெளிவு.

நமக்கு நல்லது நடக்க வேண்டும். இந்தப் பேரிடரில் இருந்து நாடும் மக்களும் விரைந்து மீண்டு வரவேண்டும். இயல்பு வாழ்க்கை மீண்டும் மலர வேண்டும். பொருளாதார நெருக்கடி – சுகாதாரப் பேரிடரில் இருந்து முழுமையாக மீண்டு வரவேண்டும்.

இன்னோர் அரசியல் வேண்டாம். நாடும் மக்களும் தாங்க மாட்டார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் பேதமின்றி இணைந்து செயல்பட்டால் வெற்றியின் சுவையை விரைந்து  அனுபவிக்கலாம்.

 

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here