ஆலய தரிசனமும் நாம் கடைப்பிடிக்க வேண்டியவையும்

கோலாலம்பூர், ஜூலை 23:

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று திருமூலர் கூறியுள்ளார். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றார் ஒளவையார். என்னதான் வீட்டில் தனியாக பூஜை அறை அமைத்து தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், கோயிலுக்குச் சென்று நம் பிரார்த்தனைகளை முறையிட்டு வழிபட்ட திருப்தி கிடைக்காது. ஆலய வழிபாடு இந்து சமயத்தில் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. பசுவின் உடல் எங்கும் இரத்தம் உள்ளது ஆனால் அதன் மடியிலிருந்து மட்டுமே பால் கிடைக்கின்றது. அது போல இறைவன் எல்லா இடங்களிலும் வியாபித்து இருந்தாலும் ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசிப்பதால் நமக்கு இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும்.

“நாம் சந்தோஷம் நிறைந்த அமைதியான வாழ்வைப் பெறுவதற்காக, தினந்தோறும் ஆலயத்திற்கு வந்து தெய்வ தரிசனம் பெறுகிறோம். நம்மில் பலர் இறையருளைப் பெறும் ஆர்வத்தில், நம்மையும் அறியாமல் சாஸ்திரங்களின் விதிகளையே மீறவிடுகிறோம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். அவரை வழிபடும்போது இனியாவது சில விதிகளை நாம் பின்பற்றுவோம்.

செய்ய வேண்டியவை...

1.கோயிலுக்குச் செல்லும் முன்னர் குளித்து விட்டு தூய ஆடைகளை உடுத்திச் செல்ல வேண்டும்.

2.கோயில் அருகில் சென்றதும், கோயிலுக்கு முன்பாக நின்று கோபுரத்தை நோக்கி வணங்க வேண்டும்.

3.பசுமடம் உள்ள கோயிலுக்குச் சென்றால், வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு சென்று பசுவுக்குக் கொடுப்பது  சிறப்பு.

4.சிவன் கோயில் என்றால் 3, 5, 7 என எண்ணிக்கையில் வலம் வர வேண்டும்.

5.சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும். அதேபோல நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் செல்லக் கூடாது.

6.விநாயகரை  இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட வேண்டும்.

7.கோயிலின் உள்ளே உள்ள மற்ற சந்நிதிகளைக் காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

8.அந்தந்த சந்நிதிக்கு ஏற்ற ஸ்துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு. மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சந்நிதியில் உள்ள கடவுளின் பெயரைச் சொல்லி ஓம் (சிவ) போற்றி என்று கூறலாம்.

9.கோயிலில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.

10.கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

11.கோயிலில் இருந்து திரும்பும்போதும் மீண்டும் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.

12.கோயிலில் இருந்து நேராக நம் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

செய்யக்கூடாதவை

  1. கோயிலின் பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

2.கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

  1. கோயில் இறைவன் குடியிருக்கும் தலம் அங்கு கோயிலில் வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதலும் உரக்கப் பேசுவதலும் தவறு. இது மற்றவர்களின் வழிபாட்டுக்கும் இடையூறாக அமையும்.
  2. புனித இடமான கோயிலுக்குள் இருக்கும்போது, வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல், சிகரெட் பிடித்தல் நிச்சயம் கூடாது.

5.விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

6.கோயிலுக்குள் உறங்கக் கூடாது.

7.கோயிலில் இருந்து வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஓர் இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.

8.பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

9.தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டோ, ஈரத் துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.

10.கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக்  கால்களைக்  கழுவக் கூடாது.

கோயில் வழிபாடு சிறப்பாக அமைய இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து இறை அருள் பெற்று இன்புற்று வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here