மருந்து வாங்கலையோ… மருந்து! மருந்து…

! ல் ழ  ஊ  ல் ழ ஊ   ல் ழ ஊ 

பல கோடி வெள்ளி மதிப்பிலான மருந்துகளை அரசாங்கத்திற்கு விநியோகம் செய்ததில் முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு நெருக்கமான அம்னோ அரசியல்வாதிகள், அக்கட்சியின் பெருந்தலைகள் ஆதிக்கம் செய்திருக்கின்றனர் என்ற தகவல் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.

நாடு முழுமையிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் , அரசாங்க கிளினிக்குகளுக்கு இவர்கள் மருந்துகளை விநியோகம் செய்திருக்கின்றனர்.

இவர்களது இந்த ஆதிக்கமே மருந்து விலைகள் அநியாயத்திற்கு எகிறிப் போயிருந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஆதிக்கம் குறித்து பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட்டிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த 12 பக்கங்கள் அறிக்கையில் 20 கம்பெனிகள் பெயர்கள் இடம்பெறுள்ளன. அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட உயர்மட்ட அரசியல்வாதிகள் ஆகியோருக்குச் சொந்தமானது ஆகும்.

இந்த அறிக்கை தொடர்பில் விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டது. எல்லாமே சோற்றில் மறைந்த பூசணி கதைபோல் ஆகிவிட்டது.

இந்தக் கம்பெனிகள் யாவும் 2013 முதல் 2016 வரை டெண்டர் ஏஜெண்டுகளாக செயல்பட்டிருக்கின்றன. இவர்கள் பெற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு மொத்தம் 3.7 3.7 பில்லியன் வெள்ளி (370 கோடி) ஆகும்.

70க்கும் அதிகமான மருந்து தயாரிப்பு கம்பெனிகளுக்கு இவர்கள் டெண்டர் ஏஜெண்டுகளாக இருந்திருக்கின்றனர்.

இதற்கு என்ன பெயர்? ஊழல் என்பதைவிட வேறு பொருத்தமான பெயர் சூட்ட முடியுமா?

எஃப்.எம்.டி. மேற்கொண்ட ஓர் ஆய்வில் இந்த மொத்தத் தொகையில் 1.4 பில்லியன் (140 கோடி) வெள்ளி அல்லது 38 விழுக்காடு ஒரு முன்னாள் அமைச்சரும் அம்னோ மகளிர் அணியின் பெரும் தலைவியுமான ஒருவர்தம் உறவினரின் கம்பெனிக்குப் போயிருப்பது தெரிய வந்தது.

பெல்டா முன்னாள் உயர் அதிகாரி, அமெரிக்காவுக்கான ஒரு முன்னாள் தூதர். சுகாதார அமைச்சின் ஒரு முன்னாள் அதிகாரி, கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற ஒரு முன்னாள் அமைச்சர் ஆகியோரும் இந்த மருந்து விநியோக ஆதிக்கத்தில் இடம் பெற்றிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அரசாங்கத்திற்கான மருந்து விநியோகம் அனைத்துலக மருந்து கம்பெனிகளால் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனை உள்நாட்டு துணை நிறுவனங்களின் டெண்டர் சமர்ப்பிப்பு வழியில் செய்து முடிக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.

இந்த டெண்டர் ஏஜெண்டுகள் அனைத்துலக மருந்து கம்பெனிகளால் நியமனம் செய்யப்படுகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் மலேசிய அரசாங்கத்தின் நேரடி டெண்டர்களில் பங்கேற்க முடியாது. ஆனால் மலேசிய விநியோகஸ்தர், வாங்கி விற்பவர் அல்லது டெண்டர் ஏஜெண்ட் மூலமே பங்குகொள்ள முடியும்.

சுகாதார அமைச்சு மருந்து கொள்முதல் டெண்டரை வெளியிடும்போது அனைத்துலக மருந்து கம்பெனிகள் பூமிபுத்ரா டெண்டர் ஏஜெண்டுகளை நியமனம் செய்யும்.

இந்த டெண்டர் ஏஜெண்டுகளுக்கு வெற்றி பெறும் டெண்டர்களுக்கு கொடுத்தப் பணம் கமிஷனாக வழங்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் அலுங்காமல் குலுங்காமல் வியர்வை சிந்தும் உழைப்பு இன்றி சுளையாக கோடி கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

2011ஆம் ஆண்டில் இருந்து அனைத்துலக மருந்து கம்பெனிகள் மலேசியாவுக்கான மருந்து விநியோகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு டெண்டர்களைப் பெறுவதில் உதவிகளைப் பெறுவதற்கு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்க வெளிநாட்டு ஊழல் செயல்கள் சட்டத்தை மீறி இந்த ஊழல் இன்னமும் நடைமுறையில்தான் இருக்கின்றன என்பது எஃப்.எம்.டி. ஆய்வில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here