அடக்கம் செய்ய நிலம் தாருங்கள்

கொத்து கொத்தாய் இறப்புகுலை நடுங்கும் தவிப்பு!

கொரோனா கொடுந்தொற்றுக் கிருமி 2020 தொடக்கத்தில் உலக நாடுகளைச் சூறையாடத் தொடங்கி இருந்த காலத்தில் இத்தாலியில் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைக் கண்டு கண்ணீர் சிந்தினோம்.

இந்தியாவில் அது மனிதர்களைக் கொன்று குவித்தது. அடக்கம் செய்யவோ எரியூட்டவோ இடம் இன்றி வரிசை வரிசையாக உடல்கள் கிடத்தி வைக்கப்பட்டன. திறந்தவெளி தகன மேடைகளில் ஒரே நேரத்தில் 20க்கும் அதிகமான உடல்கள் எரியூட்டப்பட்டன. கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்தன. மிரண்டு போய் பதைபதைத்தோம்.

மலேசியாவில் தொடக்கக் காலத்தில் இந்த இறப்புகள் நம்மைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. மிகச்சிறிய எண்ணிக்கையில் இறப்புகள் இருந்ததால் நாம் அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், அண்மைக் காலமாக கோவிட்-19 மரணங்கள் 50, 60, 80, 100, 150, 190, 207 என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நமக்குப் பெரும் பீதியை ஏற்படுத்திவருகிறது.

சவக்கிடங்குகளில் இடம் இன்றி அந்த அறையில் பார்க்கும் இடம் எல்லாம் பிளாஸ்டிக் பேக்குகளில் அடைக்கப்பட்ட மனித உடல்கள் தரைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த காட்சிகள் இதயங்களைக் கசக்கிப் பிழிந்தன.

யாரோ எவரோ, உறவோ, நட்போ… அவர்களுக்காக நம் கண்கள் பனித்தன. மலாய்க்காரர்கள்தாம் இறப்பில் முன்னணியில் இருந்தனர் என்ற நிலைமாறி அண்மைய சில தினங்களாக இந்தியர்கள் இறப்பு எண்ணிக்கை புதிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசம் சாப்பிட்டால் – குடித்தால் கொரோனா கிட்டே வராது – எட்டி ஓடிவிடும் என்று யதார்த்தம் காட்டினோம். அந்த யதார்த்தத்தால் இன்று நம்மவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்த  வண்ணம் உள்ளது. ரசத்த்டிற்கு எதிர்பொஉ சக்தி உண்டு என்பது உண்மையே! ஆனாலும் அந்த சக்தி எதிர்ப்புத்தனமைக்குப் போதுமானதல்ல. அந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கிவிட்டது கோவிட்-19.

சீனர்களும் சீக்கியர்களும் பௌத்தர்களும் இந்தப் பட்டியலில் தற்போது இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்கள் பெரும்பாலும் தகனம் செய்யப்படுவதால் தகனம் செய்யும் இடங்களில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையால் உடல்கள் பல நாட்களாகத் தேங்கிக்கிடக்கும் ஒரு பரிதாப நிலை.

முஸ்லிம் சகோதர – சகோதரிகள் அடக்கம் செய்யப்படுவதால் துரித கதியில் அவர்களது உடல்கள் விரைந்து மையத்துக்கொல்லைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

முஸ்லிம் அல்லாதவர்களின் உடல்களைச் சவக்கிடங்கில் வைப்பதற்கு இடம் இல்லாததால் ஈர மனம் படைத்த நல்லவர்களின் ஆதரவில் குளிர்பதன வசதியுள்ள 5 கொண்டெய்னர்கள் மருத்துவமனைகளில் தற்காலிக உடல்கள் சேமிப்புக் கிடங்காக மாறியுள்ளன.

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் 3, செலாயாங் மருத்துவமனையில் 1, ஷா ஆலம் மருத்துவமனையில் 1 என கொண்டெய்னர்கள் நம் மக்களின் உடல்களைப் பாதுகாத்து வருகின்றன.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அந்த உடல்கள் அங்கே இருக்கும்? புதிதாக இறப்பவர்களின் உடல்களை எங்கே வைப்பது – எப்படிப் பாதுகாப்பது என்ற கேள்விகளும் ஆர்ப்பரிக்கவே செய்கின்றன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் முதல் கட்டமாக சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள இடுகாடுகளில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

ஒருவேளை இவ்வளவு உடல்களையும் இந்த இடுகாடுகளில் அடக்கம் செய்வதற்கு இடம் இல்லை எனில் புதிதாக ஓர் இடுகாட்டு நிலத்தை அரசாங்கம் அடையாளம் காட்ட வேண்டும். மாநில அரசாங்கம் இதற்குக் கண்டிப்பாக மறுப்புத் தெரிவிக்காது.

ஒரே இடுகாட்டில் இந்த கோவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதன் மூலம் அங்கு இவர்களுக்காக நினைவாலயம் எழுப்புவதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டும்.

உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் இந்த ஒரே இடத்தில் அவர்களது நினைவாகப் பிரார்த்தனை செய்வதற்கும் வசதியாக இருக்கும். தகனம் செய்ய விரும்புகின்றவர்கள் ஒருபுறம் இருக்க அடக்கம் செய்ய விரும்புகின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

அவர்களது விருப்பமும் நிறைவேறும் அதேவேளையில் முஸ்லிம் அல்லாத சகோதர – சகோதரிகளுக்கு ஒரு பொது நினைவாலயம் எழுப்பும் அவர்களது கனவும் நினைவாகும்.

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here