கோலாலம்பூர், ஜூலை 30:
சவுதி அரேபியா மலேசியாவுக்கு மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்ல மூன்று விமானங்களை நியமித்துள்ளது. மலேசியா தனது கோவிட் -19 தொற்றுநோயை கட்டுப்படுத்த உதவுவதே இதன் நோக்கமாகும்.
வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், தனது முகநூல் பதிவின் மூலம் இதனை தெரிவித்தார். நேற்று மருத்துவ பொருட்கள் அடங்கிய இரண்டு விமானங்கள் தரையிறங்கின என்றும், மற்றொரு விமானம் இன்று வரவிருக்கிறது என்றும் பதிவிட்டிருந்தார்.
இன்று மாலை, மலேசியாவிற்கு சவுதி அரேபியாவின் கோவிட் -19 உதவியைப் பெறுவதற்கான விழாவில் ஹிஷாமுடின் கலந்து கொள்ளவுள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட மலேசியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உதவிகளை உடனடியாக வழங்குமாறு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அப்துல்ஸீஸ் அல்சவூட் நிவாரண மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான கிங் சல்மான் மையத்திற்கு (KSrelief) உத்தரவிட்டுருந்தார்.
பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மானுடனான தனது தொலைபேசி அழைப்பின் போது தமது வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக அரச உத்தரவு வந்தது என்றும் ஹிஷாமுடின் கூறினார்.