நரபலி கொடுக்கும் ரத்தவெறி கொண்ட பேரரசு

ஆஸ்டெக் பேரரசு பற்றித் தெரியுமா?

உலகின் பல நாகரிகங்கள், சமூகங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்டெக் சமூகத்தின் வரலாறு திகில் நிறைந்த காலகட்டமாக அறியப்படுகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் மத்திய மெக்சிகோ பிராந்தியத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த ஆஸ்டெக் மக்கள், கொடூர குணத்துக்கும் ரத்தவெறிக்கும் பேர் போனவர்கள். கடந்த ஆண்டு அகழ்வாய்வாளர்கள் அசாதாரணமான பழங்கால மனித மண்டை ஓடுகளால் கட்டப்பட்ட கோபுரத்தை கண்டுபிடித்த போதுதான் இவர்களின் மிருக குணம் தெரிய வந்தது.

யார் இந்த ஆஸ்டெக் மக்கள்?

பொதுவாக தற்போது ஆஸ்டெக் என அழைக்கப்படும் கலாசாரத்தில் நவாட்டெல் மொழி பேசும் மெக்சிகா மக்கள், தற்போது மெக்சிகோ நகரம் அமைந்திருக்கும் இடத்தில் டெனாச்டிட்லான் நகரில் வாழ்ந்தார்கள்.

டெனோச்டிட்லான், டெக்ஸ்கோகோ, த்லாகோபான் போன்ற பழங்குடியினர் இணைந்து நிறுவிய பேரரசை பற்றி விவரிக்க வேண்டுமானால், அதை ‘ஆஸ்டெக்’ என்கிற ஒற்றை வார்த்தை மூலம் குறிப்பிடலாம்.

பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெக்சிகா பழங்குடிகள் மத்திய மெக்சிகோ பகுதிக்கு வந்தனர். டெக்ஸ்கோகோ ஏரியின் சேறும் சகதியும் நிறைந்த தீவில் டெனோச்டிட்லான் நகரை அவர்கள் நிறுவினர்.

தங்களுக்காக குரல் கொடுப்பவரான லாடோஆனியின் ஆளுகையில், செயற்கையாக உருவான தீவில் மக்காச்சோள சாகுபடியில் புதிய வேளாண் முறைகளை நேர்த்தியான வகையில் இந்த மக்கள் மேம்படுத்தினர்.

பிபில்டின் எனப்படும் உயர்குடி பிரபுக்கள் , மாசெகுவால்டின் எனப்படும் சாதாரண மக்களும் கலந்ததாக ஆஸ்டெக் சமுதாயம் காணப்பட்டது. டெசுகாட்லிபோகா, டிலாலோகா, கிட்சால்குவாடலி போன்ற தெய்வங்களின் வழிபாடு இச்சமூகத்தின் ஓர் அங்கமாக விளங்கியது.

இந்த மக்கள், தங்களுடைய வாழ்விடத்தை பாதுகாக்க வலுவான படை பலத்தை கொண்டிருந்தனர்.

பதினைந்தாம் நூற்றாண்டில் டெனோச்டிட்லான், டெக்ஸ்கோகோ, த்லாகோபான் ஆகிய நகரங்களில் வாழும் பழங்குடியினர் ஆண்ட அரசுகள் இணைந்த மூவர் கூட்டணி, தங்களுக்கு அருகருகே இருந்த நகரங்களை கைப்பற்றி ஆஸ்டெக் பேரரசை நிறுவினர். பின்னர் இவர்கள் தங்களை மெக்சிகா என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கினர்.

அந்த காலகட்டத்தில் டெனோச்டிட்லான் நகர மக்கள்தொகை இரண்டு லட்சத்தில் இருந்து மூன்று லட்சத்துக்கு உள்ளாக இருந்தது.

இந்த டெனோச்டிட்லான் நகரில் மிகப்பெரிய ஆலயமான படிக்கட்டு வடிவிலான பிரமிட் கோயில் இருந்தது. இங்குதான் பெருமளவிலான நரபலி கொடுக்கப்பட்டது. இந்த நரபலி நடைமுறை மெசோ அமெரிக்க கலாசார காலம் முதல் வழி வழியாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய மெக்சிகோவின் பெரும்பாலான இன குழுக்கள், அடிப்படை கலாசார பண்புகளை பகிர்ந்து கொண்டதால் ஆஸ்டெக் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் பண்புகள், ஆஸ்டெக்குகளுக்கு மட்டுமே உரியவை எனப் குறிப்பிட்டுக் கூறி விட முடியாது. இதே காரணத்திற்காக ஆஸ்டெக் நாகரிகம் என்ற கருத்துத் தோற்றத்தை, ஒரு பொது இடை அமெரிக்க நாகரிகத்தின் சமகால நாகரிகமாக அறிய முடிகிறது.

ஆஸ்டெக் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது எப்படி?

ஆஸ்டெக் நாகரிகத்தின் வீழ்ச்சி கொடூரமான குடியேற்றவாதத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. ஹெர்னான் கோர்டெஸ் தலைமையிலான ஸ்பெயின் படைகள் 1521இல் மெக்சிக்கோவுக்குச் சென்றன.

ஆஸ்டெக்குகளின் எதிரிகளான ட்லெக்சகாலாக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட ஸ்பெயின் படையினர், ஆஸ்டெக் பேரரசனான இரண்டாம் மொக்டெஸூமாவை கொலை செய்தனர். எங்கெல்லாம் டெனோச்டிட்லான் இருந்தார்களோ அங்கெல்லாம் ஸ்பெயின் படையின் ஆதிக்கம் காணப்பட்டது.

இந்த போர் தாக்கத்துடன் தட்டம்மை, சின்னம்மை போன்ற நோய்களும் பரவியதால் சிறுபான்மையினராகி விட்ட பழங்குடிகள் அடியோடு மடிந்தனர். அத்துடன் ஆஸ்டெக் சாம்ராஜ்யமும் முடிவுக்கு வந்தது.

ஆஸ்டெக் ஆலயத்தில் நரபலி கொடுக்கப்படது ஏன்?

ஆஸ்டெக்குகள், “கடவுள் எதை எல்லாம் கொடுத்தாரோ அதை எல்லாம் அவருக்கே திருப்பித் தர வேண்டும்,” என்பதை உறுதியாக நம்பினர்.

மனித குலத்தை உருவாக்க கடவுள்கள் தங்களையே தியாகம் செய்து கொண்டதாக புனையப்பட்ட கதைகளை அவர்கள் காலங்காலமாக பேசி வந்தனர்.

லால்டெகுட்லி என்ற ஒரு கதையில் தனது உடலை இரண்டாகப் பிளந்து நிலத்தை கடவுள் உருவாக்கியதாகவும் அதில் பிறந்த மனிதர்கள், தங்களுடைய ரத்தத்தை உணவாக அளித்து கடவுளுக்கு தங்களுடைய நன்றியை செலுத்தி வந்ததாகவும் கூறினர்.

மற்றொரு கதை, கடவுள் பூமிக்கடியில் சென்று முந்தைய யுகத்தில் இறந்து, ஒரு ஆண் , ஒரு பெண்ணின் எலும்பை சொர்க்கம் என்று அழைக்கப்படும் இடத்துக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு ஒரு பெண் தெய்வம் கல் மீது உரசி எலும்பை தூள் தூளாக்கியதாகவும், பிறகு அந்த எலும்பு மாவு மீது ஆண் கடவுள் தன்னுடைய ஆண் குறியில் இருந்து ரத்தத்தை சிந்தியபோது சிறிய, சிறிய மனித உருவங்கள் வெளிப்பட்டதாகவும் இவர்களின் கற்பனை கதை நீள்கிறது. இப்படிப்பட்ட கதைகளுடனேயே இந்த மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, உலகில் ஐந்து யுகங்கள் உள்ளதாகவும் தாங்கள் ஐந்தாவது யுகத்தில் இருப்பதாகவும் ஆஸ்டெக்குகள் நம்பினர்.

தங்களுக்காக உடலில் இருந்து ரத்தம் சிந்தி மனிதர்களை உருவாக்கிய கடவுளுக்கு கைமாறு செய்ய நரபலி ஒன்றே வழி என ஆஸ்டெக்குகள் நம்பினர்.

சூரியனுக்கு படையலாக மனித ரத்தம் வழங்கப்படாமல் போனால், உலகம் முடிவுக்கு வந்து விடும் என அவர்கள் ஆணித்தரமாக நம்பினர்.

பிற புனைவுக் கதைகளில் இடம்பெறுவது போல மனித நரபலி கொடுத்தால் பொன் கிடைக்கும், பொருள் கிடைக்கும், சக்தி கிடைக்கும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது போல சுயநலமாக இல்லாமல் மனித குலத்துக்கான நரபலியாகவே தங்களுடைய படையலை ஆஸ்டெக்குகள் கருதினர்.

மனித குலம் தழைக்க நரபலி அவசியம் என்று அவர்கள் நம்பினர். கடவுளுக்கு மனிதர்கள் பட்ட சமய கடன் என்பது போல அவர்கள் எண்ணினர்.

இந்த புனைக் கதைகளை நம்பி எவ்வளவு மனித உயிர்களை ஆஸ்டெக்குகள் காவு கொடுத்திருப்பார்கள் என்பதை புள்ளியியல் ரீதியாக கணக்கிடுவது கடினம். ஆனால், அவர்கள் வாழ்ந்த காலத்தில் நரபலிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தனர், அதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்று மட்டும் உண்மை.

நரபலிக்கு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா?

நரபலி கொடுப்பதை ஒட்டுமொத்த ஆஸ்டெக் சமூகமே ஒரு புண்ணிய நோக்கமாக கொண்டிருந்தனர். அதனால், நரபலிக்கு சிலர் தன்னார்வலர்களாக வந்தனர். சில நேரங்களில் போரில் கைப்பற்றிய நகரங்களில் வாழ்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களும் நரபலி கொடுக்கப்பட்டனர்.

சில நேரங்களில் ஐந்து பேர் ஒரே நேரத்தில் நரபலி கொடுக்கப்பட்டனர். சிலர் இறைவனுக்காக உயிர் பலி கொடுக்க அவதரித்தவர்கள் என்ற பெயருடன் நரபலி கொடுக்கப்பட்டனர். முக்கிய திருவிழாக்களில் இந்த வகை நபர்கள் கொல்லப்பட்டனர்.

மழை கடவுளுக்காக சிறார்கள் பலி கொடுக்கப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் பழங்கால ஆஸ்டெக் பேரரச தலைநகரான டெனோச்டிட்லான் நகரைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். உச்சந்தலை மயிர் எதிர்திசையில் வளரக் கூடியதாக காணப்பட்டால் அந்த நபர் பலி படையலுக்காகவே பிறந்தவர் என்று ஆஸ்டெக்குகள் நம்பினர்.

குழந்தை இறப்பு விகிதம் அதிகம் உள்ள கலாசாரத்தில் இதுபோல சிறார்கள் பிறக்கும்போது, இத்தகைய தலை மயிருடன் பிறப்பவர்களிடம் இருந்து மக்கள் விலகியே இருப்பர். கொல்லப்படும்போது அந்த சிறாரும் சுற்றி நிற்கும் மக்களும் அழ வேண்டும். அவர்களின் கண்ணீர், மழை கடவுளின் மனதை குளிரச் செய்யும், மழை பொழியும் என்பது ஆஸ்டெக்குகளின் நம்பிக்கை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக இதுபோன்ற சிறார்கள் கோயில் பலி பீடத்தில் கொல்லப்படுவதில்லை. மாறாக, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஏரியில் வைத்து கொல்லப்பட்டார்கள். டெனோச்டிட்லான் நகர மக்களும் அந்த காலத்தில் பின்பற்றினார்கள். ஒரு போர் வீரனாக வேறு நகரத்தால் பிடிபட நேர்ந்தால் அவர் பலி கொடுக்கப்பட வேண்டியவர் என்ற நம்பிக்கையை அந்த நகர மக்கள் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனித குலத்துக்காக நடக்கும் உயிர் பலியோ அல்லது போரில் கொல்லப்பட்டு ஏற்படும் உயிர் பலியோ – அந்த மக்கள் அனைவரும் இறந்த பிறகு மதிக்கப்படுவார்கள் என்ற பொதுவான நம்பிக்கையை மெக்சிகா மக்கள் கொண்டிருந்தனர். இது நவீன கால உயிர்த்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு ஒப்பானதாக இருந்து வந்துள்ளதுர்த்தியாகம் செய்யாமல் சாதாரணமாக இறக்கும் மக்கள் மிக்ட்லான் என்ற இடத்துக்கு செல்வார்கள் என்றும் அது நரகம் போல இல்லாமல் இரவற்ற அசெளகரியமான சூழலைக் கொண்டிருக்கும் என்றும் அங்கிருந்தபடி மோட்சத்துக்கான வாழ்வை நோக்கி இறந்தவர்கள் துன்பப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்ற ஐதீகத்தையும் மெக்சிகா மக்கள் கொண்டிருந்தனர்.

அதுவே உயிர் பலி மூலம் தியாகம் செய்தவராக இருந்தால், அவர்கள் இறந்த பிறகு சூரியனுடன் நான்கு ஆண்டுகளும் பிறகு பட்டாம்பூச்சி போல சிறகடித்து மகிழ்ச்சியாக வாழ்வார் என்றும் பிறகு அவர் சொர்க்கத்தில் சோமபானம் அருந்தியபடி களிப்புடன் இருப்பார் என்றும் அவர்கள் நம்பினர்.

யதார்த்தத்தில், ஆஸ்டெக்குகள் வாழ்ந்த காலத்தில் நகரங்களைக் கைப்பற்றும் நோக்கிலும் கடவுளைப் போற்றுகிறோம் என்ற பெயரிலும் பல கொடூர கொலைகள் அந்த காலத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன.

நகரங்கள் கைப்பற்றப்படும்போது ஒரு வீரனாக பிடிபடுபவர், தன்னுடைய தலைவிதியை துணிச்சலுடன் ஏற்கும் பக்குவமுடையவராக இருந்திருக்கிறார். பலி கொடுக்கப்பட்ட மற்றவர்கள், அடிபட்டும் உதைபட்டும் மரண மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர்களின் மரண ஓலத்துக்கு சுற்றி நின்றவர்கள் சாட்சியாக மட்டுமே இருந்ததை ஆஸ்டெக்குகளின் வரலாறு உணர்த்துகிறது.

 

நன்றி ;பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here