வீட்டை விட்டு வெளியேற்றப்படும் மக்கள் போராட்டம்!
வாடகை செலுத்த முடியாதவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான தடையை நீட்டிக்க வலியுறுத்தி அமெரிக்காவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.இதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் மக்கள் பலர் வருமானமின்றி வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு வாடகை செலுத்தாத மக்களை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு 11 மாதங்கள் தடை விதித்தது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு உதவும் வகையில் பல பில்லியன் டாலர்களை வீட்டு வாடகைக்காக அரசு ஒதுக்கியது.
ஆனால் சுப்ரீம்கோர்ட் அந்த நிதியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. வாடகை செலுத்தாத மக்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான தடை முடிவுக்கு வந்ததன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் நாடாளுமன்றத்திடம் வீட்டை அப்புறவுப்படுத்துவதற்கான தடையை நீட்டிக்க வேண்டும் என முன்னதாகவே கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.ஆனால் குடியரசு கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை ஏற்று கொள்ளாததால் தடை நீடிக்காமலேயே ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் ஜனநாயக கட்சியின் உறுப்பினரான கோரி புஷ் நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி விடிய விடிய போராட்டம் நடத்தியுள்ளார்.