சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல். “
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மீது வன்முறை தாக்குதலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் நேற்று மாலை அடித்து நொறுக்கினார்.
பெரிய பட்டாக்கத்தி உடன் உள்ளே நுழைந்த இவர் அங்கிருந்த டிவி, கம்ப்யூட்டர், கண்ணாடிகள் உள்ளிட்ட வற்றை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் போலீசார் மர்ம நபரை பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மற்ற ஊடகங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், “சென்னையில் உள்ள சத்தியம் செய்தி தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த ஒருவர், கத்தியை காட்டி, அங்கிருந்த பத்திரிகையாளர்களை மிரட்டியதுடன் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே, பத்திரிகை சுதந்திரத்திற்கு நாடு முழுவதும் அச்சுறுத்தல் நிலவும் சூழ்நிலையில், தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், மேலும் கவலையளிக்கிறது.
ஆகவே, தமிழக அரசு இத்தகைய செயல்களை தொடக்கத்திலேயே தடுக்கும் வகையில், தாக்குதலில் ஈடுபட்டவர் மீது உடனடியாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.
தமிழக அரசு, ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில், பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த தருணத்தில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது