கோம்பாக்: குறைந்தது 14 வழக்குகளுடன் சம்மந்தப்பட்ட வாகன திருட்டு கும்பலின் முயற்சியை கோம்பாக் மாவட்ட போலீசார் முறியடித்து, அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரை கைது செய்துள்ளது.
இந்த குழுவை சில காலமாக பின் தொடர்ந்த போலீசின் உளவுத்துறை தகவல் சேகரித்து வந்தனர் என்று கோம்பாக் மாவட்ட துணை கமிஷனர் ஜைனல் முகமட் முகமட் இன்று (ஆகஸ்டு 6) ரவாங் காவல் நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
சேகரிக்கப்பட்ட தகவலின் பேரில், “ஆகஸ்டு 4 அன்று பெக்கான் ரவாங்கில் இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமாக செயல்படுவதைக் கண்டோம்”.
“இருவரில் ஒருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருட முயன்றார். அவர்களில் ஒருவரைப் பிடிக்க முடிந்தது ஆனால் மற்றவர் தப்பிவிட்டார்,” என்று அவர் கூறினார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னரே, திருட்டு முயற்சி குறித்து மோட்டார் வண்டியின் உரிமையாளரிடம் அறிவிக்கப்பட்டது என்று ஏசிபி ஜைனல் கூறினார்.
“கோவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது கூட நாங்கள் குற்றச்செயல்களை தடுக்கும் பணியிலும் தீவிரமாக உள்ளோம் என்பதை இது காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
சந்தேக நபரை விசாரித்த பிறகு, 16 வாகனங்களை போலீசார் கண்டுபிடித்தனர், அவற்றில் சில ஏற்கனவே பாகங்களாக அகற்றப்பட்டன.
கண்டுபிடிப்பின் மதிப்பை 50,000 வெள்ளி முதல் 60,000 வெள்ளிக்கு இடையில் உள்ளதாக போலீசார் மதிப்பீட்டில் கண்டறிந்தனர்.
“நாங்கள் குறைந்தது 14 (வாகன திருட்டு) வழக்குகளை இதன்மூலம் தீர்த்து வைத்துள்ளோம்”.
“இந்த கும்பலில் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், கைது செய்யப்பட்ட போது தப்பியோடிய இரண்டாவது சந்தேக நபரை நாங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட முகமட் பகுருசி முகமது நோர் (35) காவல்துறையினரின் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று ACP ஜைனல் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.