அனைத்துலக இளையோர் அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மகத்தான சாதனை

தெலுக் இந்தான், ஆக. 26-

  கீழ்ப்பேராக் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி கொடை வள்ளல் அமரர் டத்தோ கரு. சிதம்பரம் பிள்ளையால் நிறுவப்பட்ட சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பன்னாட்டு அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

  இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை இந்தோனேசியா நாட்டின் அறிவியல் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்பாட்டில், உலக இளையோர் அறிவார்ந்த புத்தாக்க விருதுக்கான (WYIIA) போட்டி இயங்கலையில் மிக பிரமாண்டமாக நடந்தேறியது.

  இப்போட்டியில் மொத்தம் 35 நாடுகளிலிருந்து 377 குழுக்கள் பங்கேற்றன. இப்போட்டிக்கு MIICA தலைமையில் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஒரு தங்கம், மூன்று வெள்ளி விருதுகளைப் பெற்று  பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

  இந்த 2021ஆம் ஆண்டில் இதுவரை சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மூன்றாவது முறையாக அனைத்துலக அளவில் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்போட்டியில் இப்பள்ளியிலிருந்து இரண்டாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் 4 குழுக்களாகப் பங்கேற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

  அனைத்துலக  அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் கண்டுபிடிப்பும் அதன் விவரங்களும் பின்வருமாறு:-

 

 

புத்தாக்கம் : வாயுபுத்ரா என்ற தானுறிஞ்சி

பதக்கம் : தங்கப்பதக்கம்

மாணவர்கள் :

 

 1. திருநியன் காளிதாஸ்

புத்தாக்கம் விளக்கம்:-

தரையில் காணப்படும் சிறு குப்பைகளையும் தூசியையும் உறிஞ்சி ஒரு பைக்குள் சேகரிக்கும் இயந்திரம் தானுறிஞ்சி ஆகும். இப்பொறியைப் பயன்படுத்துவதற்கு முன்னர், துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர். இன்றும், நம் வீடுகளில் அதிக அளவில், துடைப்பம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக தரையில் கம்பளம் இடப்பட்ட வீடுக

 

ளில் இது பயன்படுகின்றது. தானியங்கு தூசி உறிஞ்சிகளும் தற்போது விற்பனையில் உள்ளன. இன்று நம் வீட்டுச் சுற்றுப்புறத்தினை அழகாக வைத்திட இக்கருவி பயன்படுகிறது. மேலும் மறுபயனீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி புத்தாக்கங்களை உருவாக்கலாம் என நிரூபித்துள்ளார் நம் ஆய்வாளர்.

 

புத்தாக்கம் : USB ஐ பயன்படுத்தி ஒளிக்காற்றாடி

பதக்கம் : வெள்ளிப் பதக்கம்

மாணவர்கள் :

 1. பவனேஷ் பிள்ளை வெங்கடேச பெருமாள்
 2. யோகேந்திரன் குமார்
 3. திவினாஸ்ரீ முனியாண்டி
 4. ஹர்ஷினி முத்துவேலு
 5. லிசானி கோபி

புத்தாக்கம் விளக்கம்:

மறுபயனீட்டுப் பொருட்களைக் கொண்டு ஒளிக்காற்றாடி தயாரித்துள்ளனர். இப்புத்தாக்கத்தில் மாணவர்கள் இயற்கை வளத்தினைப் பயன்படுத்தி மின்சக்தியினை உருவாக்கி ஒளிக்காற்றாடி இயங்க வைத்துள்ளனர். கோறனி நச்சில் காலகட்டத்தில் மாணவர்கள் கணினி பயன்படுத்துகையில் இத்தகைய ஒளிக்காற்றாடி பயன்படுத்துவதனால் மின் கட்டணத்தைக் குறைத்திட முடியும் என்பதனைத் தங்கள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

புத்தாக்கம் : சுந்தர வாகனம் :- குப்பைகளை துப்புரவு செய்து தரையினை துடைக்கும் கருவி

பதக்கம் : வெள்ளிப் பதக்கம்

மாணவர்கள் :

 1. பிரசீலன் சிவகுமார்
 2. கென்னத் சவரி நாதன்
 3. ஹெர்வின் ராப்பேல் சவரிநாதன்
 4. கிஷான் சுப்ரமணியம்
 5. சக்திவேல் சிவகுமார்

புத்தாக்கம் விளக்கம்:

மறுபயனீட்டுப் பொருட்களின் துணைகொண்டு குப்பைகளை துப்புரவு செய்து தரையினைத் துடைக்கும் கருவியினை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இக்கருவியினால் நாம் இரு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது என ஆய்வுப்பூர்வமாக எடுத்துரைத்துள்ளனர்.

 

புத்தாக்கம் : வளவன் :- மொழியணிகளைக் கற்க எளிய மனமகிழ் கல்வி முறை

பதக்கம் : வெள்ளிப் பதக்கம்

மாணவர்கள் :

1.கீர்த்தி விஜயகுமார்

2.அருந்ததி சக்திவேல்

3.யுகன் விஜயகுமார்

4.ரிஷிகேஸ்வரன் குமாரா

5.தேஷ்னா ரவின்

புத்தாக்கம் விளக்கம்:

மலேசியாவில் தேர்வு அடிப்படையிலான கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதனால் மாணவர்கள் மனமகிழ் கல்விமுறை வாயிலாக தமிழ்மொழி மொழியணிகளைக் கற்பதற்கு வளவன் விளையாட்டினை உருவாக்கியுள்ளனர். விளையாடும்போது குழந்தைகள் சமூகத் தொடர்புகளிடம் ஒத்துழைக்கவும் விதிகளைப் பின்பற்றவும் சுயகட்டுப்பாடு போன்ற குணங்களைத் தாமாகவே கற்றுக்கொள்கின்றனர். விளையாடும் குழந்தைகள் சந்தோஷமாகவும் மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற குணங்களை மற்ற விளையாடாத குழந்தைகளைக் காட்டிலும் நன்றாகவும் கற்றுக்கொள்கின்றனர் என்பதனை தங்கள் ஆய்வில் கூறுகின்றனர்.

  வகுப்புசார் மதிப்பீட்டு முறையில் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் இம்மாதிரியான அறிவியல் புத்தாக்கம் அனைத்து பாடங்களிலும் ஒன்றிணைக்க வேண்டும். பல இளம்  ஆய்வாளர்களைக் கண்டெடுத்து அவர்களுக்கான களத்தினைக் காட்டும் பணி இன்று ஆசிரியருக்கு உண்டு, மேலும் மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தங்களை பக்குவப்படுத்திக் கொள்ள இம்மாதிரியான போட்டிகள் நல்ல அனுபவக் கல்வியினை வழங்கி வருகிறது. நாமே உருவாகுபவர், நாமே வளரும் பயனீட்டாளர் என்ற சிந்தனையில் தொடர் பீடுநடை போட்டால் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய புத்தாக்கம் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படுகிறது என இக்குழுக்களின் தலைமைப் பயிற்றுநர் ஆசிரியர் தனேசு பாலகிருட்டிணன் குறிப்பிடுகிறார்.

   மலேசியா பொருளாதார வல்லரசாக மாற அறிவியல் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றும் எனக் கருதுவதாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் இரா. கணேசன் கருத்துரைத்தார். மாணவர்கள் தங்களின் தேவைகளைக் கேட்டறியும் காலத்தில் நாம் பயணிக்கிறோம். அப்பாதையில் எங்கள் பள்ளி தொடர்ந்து செயல்பட சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் 21ஆம் நூற்றாண்டு மாணவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு இம்மாதிரியான போட்டிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றன்ர்.

  அவ்வரிசையில்  ஆசிரியர்கள் பா.தனேசு, சீ.கோபாலா ராவ், ஆசிரியைகள்  சு. அனிதாவிநாயகி, பெ.வள்ளியம்மா ஆகியோரின் சேவையினை இவ்வெற்றியின் வாயிலாகப் பள்ளி சரித்திரத்தில் பொறித்துள்ளனர். அவர்களின் சேவையினைப் பாராட்டி பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்தினையும் நன்றியினையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

  சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுடைய வெற்றியும் பள்ளியின் மறுமலர்ச்சியாகக் கருதுவதாக இப்பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் ஆசிரியர் அ.சக்திவேல் கூறினார்.

கீழ்ப்பேராக் மாவட்டத்தில் சரித்திரம் வாய்ந்த இப்பள்ளி மேலும் பல வெற்றி மகுடம் பெற்றிட நிச்சயம் பெற்றோர் – ஆசிரியர் சங்கம் துணை நிற்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

  மலேசிய அறிவியல் புத்தாக்க நிறுவனத்தின் (MIICA) தலைவரும் சுற்றுச்சூழல் நீர்வள அமைச்சகத்தின் மூத்த உதவி செயலாளருமாகிய  ஜெ.கணேசன் கூறுகையில் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அறிவியல் புத்தாக்கமும் பிரிக்க இயலாத ஒன்றாகக் கருதும் இக்காலகட்டதில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம்மின மாணவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைப்பர் என்ற கனவும் மெய்ப்படும் காலமிது என்கிறார்.  அவ்வகையில் ஆர்வமுள்ள நம் மாணவர்களுக்குத் தொடர் பயிற்சிகளும் ஆலோசனைகளும் MIICA தொடர்ந்து வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here