எப்பொழுது கிடைக்கும் எங்களுக்குத் தீர்வு – மலேசிய இந்திய ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வேதனை

எங்களுக்கு விடிவுக்காலம் இன்று பிறக்கும்  – நாளை பிறக்கும் என்று நம்பிக்கையில் இருக்கும் எங்களுக்கு அரசாங்கத்தின் சில அறிவிப்புகள்  எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கிறோம் என்று மலேசிய இந்திய ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக செயலாளர் டத்தின் மகேஸ்வரி ரகுமூர்த்தி தெரிவித்தார்.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி 16 மாதங்களாக நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சொல்லில் அடங்காதது. ஏனெனில் எங்களுடையது பாரம்பரிய வியாபாரம் (தொழில்). ஆனால் இதே நிலை நீட்டித்தால் இந்த பாரம்பரியம் மறைந்து விடும் நிலை ஏற்படும். இந்த காலகட்டத்திலேயே பலர் தங்கள் வியாபாரத்தை மூடிவிட்டனர்.

நாங்கள் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி நிறைவான சம்பளம் வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் ஜவுளிக்கடை வேலை என்றால் வர மறுக்கின்றனர். அதனால் நாங்கள் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியிருக்கிறது.

மேலும் கோவிட் கால கட்டத்தில் பலர் சொந்த நாட்டிற்கு திரும்பி சென்று விட்டனர். பலர் திரும்பி வர முடியாத காரணத்தால் நாங்கள் அவர்களுக்காக கட்டிய லெவி கட்டணம் வீணாகி போனது. மேலும் பெர்மிட் காலவதியானவர்களுக்கு பதிலாக வேறொரு தொழிலாளியை எடுக்க முடியவில்லை. தற்பொழுது இருக்கும் சில அந்நியத் தொழிலாளர்கள் 11ஆவது அல்லது 12ஆம் ஆண்டாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேலும் பெர்மிட் நீட்டிப்பு செய்ய முடியாது.

மேலும் எங்கள் துறை முக்கியமான துறையாக அங்கீகரிக்கப்படாததால் அரசாங்கம் வழங்கிய பல சலுகைகளை எங்களால் பெற முடியாமல் போனது. எங்களுக்கு வியாபாரம் இல்லாத காலக்கட்டத்திலும் வாடகை, மின்சார கட்டணம், இருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, உறைவிடம் என்று செலவுகள் வழக்கம்போல் இருக்கிறது.

தற்பொழுது சட்டவிரோத தொழிலாளர்களை சட்டப்பூர்வமாகி கொள்ளலாம் என்ற திட்டம் குறித்து செய்தி வெளியானது. அந்த திட்டத்திலும் எங்களின் துறை சேர்க்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அரசாங்கம் சில துறைகளுக்கு வேலையாட்களை வழங்காததால் தான் சட்டவிரோத தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

அதனால் அரசாங்கம் எங்களின் பிரச்சினைகளை உணர்ந்து அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க அனுமதி வழங்கி எங்கள் பராம்பரியத் தொழிலை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று மகேஸ்வரி சங்கத்தின் சார்பில்  தன்னுடைய கோரிக்கையை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here