அரிசி கடத்திய குற்றச்ச்சாட்டில் பதின்ம வயது வாலிபர் கைது !

தும்பாட்: நேற்றிரவு அமலாக்கப் படையினர் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சோதனையிட்டதன் பின்னர், பகுதி நேரக் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

உள்ளூர்வாசியான சந்தேக நபர் நேற்று நள்ளிரவு கம்போங் காஜாங் செபிடாங்கிலிருந்து கபாங் எம்பாட் டோக் மெக் ங்காவுக்கு பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்தது .

பொது செயல்பாட்டுப் படையின் (GOF) ஏழாவது பட்டாலியன் கட்டளை அதிகாரி அசாரி நுசி இது தொடர்பில் கூறுகையில், கம்போங் காஜாங் செபிடாங்கில்  GOF படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கார் அப்பகுதியை விட்டு வேகமாக வெளியேறுவதை கண்டனர்.

” உடனே GOF குழுவினர் வாகனத்தை பின்தொடர முடிவு செய்தனர். தாம் பின் தொடரப்படுவதை உணர்ந்த சந்தேக நபர், தனது காரை அதிவேகமாக செலுத்தினார். வேகமாக சென்ற கார் சந்தேக நபரின் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் சாலையின் அருகிலுள்ள கால்வாயில் மாட்டியது.

“இருந்தாலும் கார் ஓட்டுநரான சந்தேகநபர் காயமடையவில்லை என்றும் GOF உறுப்பினர்கள் அவரது காரை சோதித்து பார்த்தபோது, காருக்குள் கடத்தப்பட்டதாக நம்பப்படும் 750 கிலோகிராம் அரிசியைக் கண்டுபிடித்தனர் என்றார்.

“மேலும் கடத்தப்பட்டதாக நம்பப்படும் அரிசி சுமார் 7,000 வெள்ளி மதிப்புள்ளது என்றும் அந்த அரிசியை வைத்திருந்த சந்தேக நபரையும் அவர்கள் கைது செய்தனர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த அரிசி தாய்லாந்தில் இருந்து மலேசியாவிற்குள் கடத்தப்பட்டது என்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அசாரி கூறினார்.

“மேலும் அரிசியை உள்ளூர் வியாபாரிகளுக்கு விநியோகிக்கும் பொருட்டே கடத்தியிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here