கனமழை மற்றும் திடீர் வெள்ளம் சூடானில் உள்ள தெற்கு சூடான் அகதிகள் முகாம்களுக்குள் புகுந்ததால், ஆயிரக்கணக்கான மக்களை மீண்டும் இடம்பெயர்ந்து அகதிகளாகிய அவலம் தொடர்கிறது.
சூடானின் 18 மாநிலங்களில் 13 மாநிலங்களில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக, இதுவரை 288,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அண்டை நாடான தெற்கு சூடானில், வெள்ளம் காரணமாக சுமார் 426,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சூடானிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக சூடானில், ஆயிரக்கணக்கான அகதிகள் வெவ்வேறு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் காப்பாற்றப்பட்ட கிராமங்களில் தஞ்சமடைந்தனர். ஆனால் பலர் இப்போது தெருக்களில் வாழ்கின்றனர் என்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது.
சூடான் அகதிகள் ஆணையத்தின் மூத்த அதிகாரி இப்ராஹிம் முகமட் கூறுகையில், “அவர்கள் மீண்டும் வீடற்றவர்களாக ஆகிவிட்டனர்” என்றார்.
“அவர்களை இடமாற்றம் செய்ய புதிய இடத்தை கண்டுபிடிப்பதில் நாங்கள் கடுமையான சவாலை எதிர்கொள்கிறோம் “ என்றும் அவர் கூறினார்.
ஆண்டுதோறும் ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு கனமழை பெய்வது வழக்கமாகும்.
கடந்த ஆண்டு, சூடான் மூன்று மாத அவசரகால நிலையை அறிவித்தது, ஏனெனில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 140 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 900,000 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.