7 மாதக்குழந்தையை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் குழந்தை பராமரிப்பாளர் கைது

ஈப்போ: தாமான் தேசா பெலான்கோங்கனைச் சேர்ந்த குழந்தை பராமரிப்பாளர் (22), தனது பராமரிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தையைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

குழந்தை இடைவிடாது தொடர்ந்து அழுததால், அது அழுகையை நிறுத்த வில்லை என்ற கோபத்தில் இரண்டு முறை குழந்தையின் தலையை தரையில் அடித்ததாக நம்பப்படுகின்றது. தரையில் தலை அடிபட்டதன் விளைவாக குழந்தை மிக ஆபத்தான நிலையில் இருந்தது.

கடந்த வியாழக்கிழமை (செப்.23) குழந்தையின் தந்தையால் போலீசில் இச்சம்பவம் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குழந்தை பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் பேராக் போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹிட் கருத்துரைத்தபோது, குழந்தையின் தந்தை வியாழக்கிழமை காலை 7.10 மணியளவில் குழந்தை பராமரிப்பாளர் வீட்டில் குழந்தையை இறக்கிவிட்டதாக கூறினார். அங்கு குழந்தையை விடும்பொழுது , குழந்தை மிகஆரோக்கியமான நிலையில் இருந்ததாக கூறினார்.

எனினும், அந்த நபருக்கு பிற்பகல் 2.35 மணியளவில் அவரது குழந்தை நடைபயிலும் வண்டியிலிருந்து ( baby Walker) கீழே விழுந்துவிட்டதாக , குழந்தை பராமரிப்பாளரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.

உடனே குழந்தை பராமரிப்பாளரது வீட்டிற்கு குழந்தையின் தந்தை வந்தபோது, ​​தனது மகனின் தலை வீங்கியிருப்பதைக் கண்டார் என்று மியோர் ஃபரிதலத்ராஷ் கூறினார்.

“அந்த தந்தை தன் மகனுக்கு என்ன நேர்ந்தது ? என்று குழந்தை பராமரிப்பாளரிடம் கேட்டார். இந்த முறை அந்தப் பெண் “தான் குழந்தையை தூக்கிச் செல்லும்போது அவன் விழுந்து விட்டான்” என்று பதிலளித்தார் என்று அவர் கூறினார்.

பின்னர் அந்த நபர் குழந்தையை ராஜா பெர்மசூரி பைனுன் மருத்துவமனைக்கு (HRPB) கொண்டு சென்றார்.

குழந்தையின் தலையில் இரத்தப்போக்கு இருப்பதாகவும், மண்டையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் சோதனைகளில் தெரியவந்தது.

மேலும் குழந்தை இப்போது சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் உள்ளது.

மியோர் ஃபரிதல்த்ராஷ் மேலும் கூறுகையில், குழந்தை அழுவதை நிறுத்தாததால் ,அந்த பெண் குழந்தையின் தலையை இரண்டு முறை தரையில் அடித்ததாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன என்றார்.

“குழந்தை சுயநினைவில்லாமல் இருப்பதை உணர்ந்தவுடன் அந்தப்பெண் அவ்வாறு செய்வதை நிறுத்திவிட்டார்,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு கொலை முயற்சி குற்றவியல் பிரிவு 307 ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here