மலேசியாவுக்கு கூடுதலாக ஒரு மில்லியன் டோஸ் சினோவாக் தடுப்பூசியை சீனா வழங்க உள்ளது

புத்ரஜெயா: சீனா மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான ஆழ்ந்த நட்பின் அடிப்படையில்,  மலேசியாவுக்கு கூடுதலாக ஒரு மில்லியன் டோஸ் கொரோனாவாக் கோவிட் -19 (சினோவாக்) தடுப்பூசியை சீனா வழங்கும் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை (செப்.29) வெளியிட்ட ஒரு அறிக்கையில், சீனாவின் மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யியும் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லாவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த முடிவை கூறியதாக தெரிவித்துள்ளது.

“முன்னதாக, சீன அரசாங்கம் ஜூலை 2021 இல் மலேசியாவின் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு உதவும் வகையில் சினோவாக் தடுப்பூசியின் 500,000 டோஸ்களை நன்கொடையாக அளித்தது,” என்றும் அது கூறியது.

விஸ்மா புத்ராவின் கூற்றுப்படி, இந்த சமீபத்திய பங்களிப்பிற்காக சைஃபுடின் சீன அரசுக்கு மலேசியா சார்பாக பாராட்டை தெரிவித்துள்ளார்.

“கோவிட் -19 தொற்றுநோய் பரவ தொடங்கியதிலிருந்து மலேசியாவும் சீனாவும் கைகோர்த்து செயல்படுகின்றன” என்று அது மேலும் கூறியது.

அரசு மற்றும் தனியார் சேனல்கள் மூலம் விநியோகிக்கப்படும் முகக்கவசங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவப் பொருட்களை நன்கொடையளிப்பதன் மூலம் சீனா மலேசியாவுக்கு தனது நட்பினை வெளிப்படுத்தியது என்றும் கூறியது.

இதற்கிடையில், வுஹானில் ஆரம்பகால கோவிட் -19 தொற்றுநோய் பரவலின் போது மலேசியாவும் US $ 1 மில்லியன் (4.1 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள 18 மில்லியன் இறப்பர் கையுறைகள் மற்றும் 15 டன் உணவுப் பொருட்களை சீனாவுக்கு வழங்கியதாக விஸ்மா புத்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here