2020 மக்கள் கணக்கெடுப்பு நேற்று வரையில் 28.1 மில்லியன் பேர் சேர்ப்பு

 செப்டம்பர் 30ஆம் தேதி நண்பகல் 12.30 மணி வரையில் நாட்டில் மொத்தமாக 28.1 மில்லியன் பேர் 2020 தேசியக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசியக் புள்ளிவிவரத்துறை தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் ஹுஸிர் மஹிடின் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையானது மலேசிய குடிமக்களின் மொத்தத் தொகை மதிப்பீட்டில் அதாவது 32.6 மில்லியனில், 86.28 விழுக்காடாகும். இந்நிலையில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை மொத்தமாக 9.0 மில்லியன் வீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த எண்ணிக்கையானது நாட்டில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையில் (9.4 மில்லியன்) 96.1 விழுக்காடாகும் என நேற்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கிளாந்தான், ஜோகூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பு நடவடிக்கை நிறைவை எட்டவுள்ளது. மேலும் அங்கு தரவுகளை உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மாநில ரீதியாக கணக்கெடுக்கப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை விகிதத்தின் அடிப்படையில் ஜோகூரில் அதிகமானோர் அதாவது 104.9 விழுக்காட்டினர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து புத்ராஜெயாவில் 101.3 விழுக்காடும் நெகிரி செம்பிலானில் 100.4 விழுக்காடும் கோலாலம்பூரில் 99.2 விழுக்காடும் பெர்லிசில் 95 விழுக்காடும் கிளாந்தானில் 93.8 விழுக்காடும் பேராக்கில் 93.2 விழுக்காடும் பினாங்கில் 92.8 விழுக்காடும் சிலாங்கூரில் 91.2 விழுக்காடும் மலாக்காவில் 88.2 விழுக்காடும் திரெங்கானுவில் 88.1 விழுக்காடும் கெடாவில் 84.3 விழுக்காடும் லாபுவானில் 78.6 விழுக்காடும் பகாங்கில் 69.3 விழுக்காடும் சரவாக்கில் 66.6 விழுக்காடும் சபாவில் 55.9 விழுக்காடும் மக்கள் எண்ணிக்கை 2020 கணக்கெடுப்பில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்ட ரீதியாக முவாலிம் மாவட்டத்தில் 116.5 விழுக்காடு என மக்களின் ஆதரவு விகிதம் பதிவாகியுள்ளது. அதனையடுத்து சமராஹான் மாவட்டத்தில் 113.8 விழுக்காடு, ஜோகூர்பாருவில் 111.1 விழுக்காடு, சிப்பாங்கில் 107.9 விழுக்காடு, மூவாரில் 107.8 விழுக்காடு என மக்களின் எண்ணிக்கைக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் 100 விழுக்காடு குடிமக்கள் இலக்கை அடைந்த மாவட்டங்களுக்கு ஆணையர் தமது வாழ்த்துகளைப் பதிவு செய்து கொண்டுள்ளார். மேலும் லிப்பிஸ் (54.7 விழுக்காடு), பேராக் (61.4 விழுக்காடு), ரவூப் (61.6 விழுக்காடு) ஆகிய மாவட்டங்கள் தீபகற்ப மலேசியா அளவில் குறைவான மக்கள் கணக்கெடுப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. அடுத்ததாக மலேசியாவில் 100 பெண்கள் எண்ணிக்கைக்கு 104 ஆண்கள் என பாலின விகிதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஆண்கள் எண்ணிக்கை 51.3 விழுக்காடா கப் பதிவு செய்யப்பட்ட வேளையில் பெண்களின் எண் ணிக்கை 48.7 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு தரவின் அடிப்படையில் நாட்டில் கணக்கெடுக்கப்பட்ட மக்களுள் 95.2 விழுக்காட்டினர் உள்நாட்டுப் பிரஜைகளாவர். மேலும் 4.8 விழுக்காட்டினர் அந்நியப் பிரஜைகளாவர்.

தொடர்ந்து மலேசியக் குடிமக்களுள் பூமிபுத்ரா பிரிவைச் சேர்ந்தவர்கள் 69.4 விழுக்காடும் சீனர்கள் 23.1 விழுக்காடும் இந்தியர்கள் 6.7 விழுக்காடும் இதர தரப்பினர் 0.8 விழுக்காடும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கணக்கெடுக்கப்பட்ட 28.1 மில்லியன் மக்களுள் வயது குறைந்த பிரிவினர் (14 வயதுக்கு உட்பட்டோர்) 25.4 விழுக்காட்டினராக உள்ளனர்.

15 வயதில் இருந்து 64 வயதுக்கு உட்பட்ட பணிபுரியும் வயதை எட்டிய தரப்பினரின் எண்ணிக்கை 69.3 விழுக்காடாக உள்ள நிலையில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 5.4 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. அதிலும் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை அதிகமான அளவில் பெர்லிஸ் மாநிலத்தில் அதாவது 9.7 விழுக்காடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 வயதில் இருந்து 64 வயதுக்கு உட்பட்ட தரப்பினரின் எண்ணிக்கை உயர்ந்த அளவில் (72 விழுக்காடு) பினாங்கு மற்றும் சரவாக் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

14 வயதுக்கு உட்பட்டோர் தரப்பினரின் எண்ணிக்கை புத்ராஜெயாவில் அதிக அளவில் அதாவது 36.5 விழுக்காடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மக்கள் கணக்கெடுப்பில் 63.3 விழுக்காடு குடிமக்கள் நேரடி முறையிலும் 22.5 விழுக்காட்டினர் மெய்நிகர் முறையிலும் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்றோடு மலேசிய 2020 கணக்கெடுப்பு 451ஆவது நாளை எட்டியுள்ளது. இம்முறை கணக்கெடுப்பு இவ்வாண்டு அக்டோபர் 31ஆம் தேதியோடு முடிவடைகிறது. இம்முறை மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கை கடந்த முறையைக் காட்டிலும் புதுவிதமாக அமைந்துள்ளது.

வரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை இந்நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும். குறிப்பாக கோவிட்-19 அபாயம் அதிகளவு இல்லாத இடங்களில் களம் இறங்கும் கணக்கெடுப்புப் பணியாளர்கள் (தற்போது 4,800 பேர்) இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியமாகின்றது எனவும் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் ஹுஸிர் மஹிடின் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here