2050க்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்; ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

சர்வதேச அளவில், வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின், உலக வானிலை அமைப்பு (W.M.O) ‘தண்ணீருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுக்கு 1 சென்டி மீட்டர் அளவில், மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல், நிலப்பரப்பில் நீர் குறைதல், நீர் தேங்கி வைத்தல் குறைவு போன்றவை நிகழ்ந்துள்ளன. மேலும் பருவநிலை மாறுபாடால் தண்ணீர் தொடர்பான பேரிடர்களான பெரு வெள்ளம், பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் வரும் காலத்தில் ஏற்படும்.

தற்போது உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதனால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து உள்ளது. தற்போது பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமல், சுத்தமான நீராக இருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒரு மாதம் 360 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்தனர். இது, 2050 ஆம் ஆண்டுக்குள் 500 கோடியாக உயரும். ஆதனால், கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த நீர் மற்றும் காலநிலை கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே தொடங்க வேண்டும். இல்லை என்றால், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here