கோலாலம்பூர்: கோவிட் -19 ஸ்பைக் புரத பிறழ்வு (Covid-19 spike protein mutation) குறித்த ஆறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 6 வரை நாடு முழுவதும் மேலும் 392 அச்சுறுத்தும் மாறுபாடுடைய வைரஸ் (VOC) தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இது பற்றி கூறியபோது, மொத்தம் 384 தொற்றுக்கள் டெல்தா மாறுபாடு (B .1.617.2) மற்றும் 8 பேத்தா மாறுபாடு (B .1.351) கொண்டவை என்றும் தெரிவித்தார்.
பெரும்பாலான அச்சுறுத்தும் மாறுபாடுடைய வைரஸ் தொற்றுக்கள் சிலாங்கூரில் கண்டறியப்பட்டன – 109 டெல்தா மற்றும் 3 பேத்தா தொற்றுக்கள் இனங்காணப்பட்டன.
மேலும் டெல்தா வகை வைரஸ் தொற்றுக்கள் இனங்காணப்பட்ட மாநிலங்களாக பினாங்கு (46 ), கோலாலம்பூர் (42), நெகிரி செம்பிலான் (34), பஹாங் (33), மலாக்கா (31), ஜோகூர் (28), சபா (21), திரெங்கானு (16),கிளந்தான் (16) , பேராக் (7), புத்ராஜயா மற்றும் லாபுவான் (தலா இரண்டு) மற்றும் கெடா (1) தொற்றுக்களும் இனங்காணப்பட்டது.
“பேத்தா வகை மாறுபாடு கொண்ட வரை தொற்றை பொறுத்தவரை, சபா (3), நெகிரி செம்பிலான் மற்றும் கிளந்தானில் தலா ஒரு தொற்றும் இனங்காணப்பட்டது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் UKM மருத்துவ மூலக்கூறு உயிரியல் நிறுவனம் (UMBI-UKM), மருத்துவ பீடம் (FOM-UM), ஒருங்கிணைந்த மருந்தியல் நிறுவனம் (iPROMISE-UiTM), வெப்பமண்டல தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் (TIDREC-UM), மலேசியா மரபணு நிறுவனம் (MGI) மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (IMR) என்பவற்றை உள்ளடக்கியது.
UMBI-UKM 91 டெல்தா வகை தொற்றுக்களை அடையாளம் கண்டுள்ளது; FOM-UM 79 டெல்தா வகை தொற்றுக்களையும் நான்கு பேத்தா வகை தொற்றுக்களையும் அடையாளம் கண்டுள்ளது; மேலும் iPROMISE-UiTM 77 டெல்தா தொற்றுக்களைக் கண்டறிந்தது; TIDREC-UM 50 டெல்தா தொற்றுக்களையும் ஒரு பேத்தா தொற்றையும் கண்டுபிடித்தது; MGI 47 டெல்தா தொற்றுக்களையும் ஒரு பேத்தா தொற்றையும் கண்டறிந்தது; IMR 40 டெல்தா தொற்றுக்களையும் இரண்டு பேத்தா தொற்றுக்களையும் கண்டறிந்தது.
இது மலேசியாவில் கண்காணிப்பின் அடிப்படையில் (VUM) மொத்த SARS-CoV-2 மற்றும் VOC வகை தொற்றுக்களின் எண்ணிக்கையை 2,252 ஆக உயர்த்தியுள்ளது என்றார்.
மொத்தத்தில், 2,232 VOC தொற்றுக்களில் 1,996 டெல்தா தொற்றுக்களும் 222 பேத்தா வகை தொற்றுக்களும் 14 ஆல்பா வகை தொற்றுக்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.