ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கி உள்ளது. இத்தகவலை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த பல ஆண்டுகளாகவே தொடர் நஷ்டத்தில்தான் இயங்கி வந்தது.
கடந்த காலங்களில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வந்ததால் ஏர் இந்தியா நிர்வாகம் நிலைமையை ஓரளவு சமாளித்து வந்தது.
ஒரு கட்டத்தில் அந்நிறுவனத்தை விற்பது என மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, அதுகுறித்த அறிவிப்பு வெளியானது. எனினும் ஏர் இந்தியாவுக்கு இருந்த கடன் சுமை காரணமாக பெரிய நிறுவனங்கள் அதை வாங்க முன்வரவில்லை. சில நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்த நிலையில், டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இதையடுத்து, ‘ஏர் இந்தியா மீண்டும் வருக’ என டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏர் இந்தியாவை வாங்கி இருப்பது மிகச்சிறந்த செய்தி என்றும், இது விமானப் போக்குவரத்துத் துறையில் மிக வலுவான சந்தை வாய்ப்புகளை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ஜேஆர்டி டாடா தான் ஏர் இந்தியா நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். 68 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா நாட்டுடமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.