இனிமேல் முடி ஈரமா இருக்கும் போது இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க… இல்லன்னா சீக்கிரம் வழுக்கை விழுந்துடும்

தலைமுடியைப் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் தற்போதைய பிஸியான வாழ்க்கை முறை, மோசமான வானிலை மற்றும் மாசுபாடு போன்றவை முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கின்றன. இதன் காரணமாக பலர் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். முடி உதிர்தல் பிரச்சனைக்கு பன்னால் பல காரணங்கள் உள்ளன. இது தவிர, நாம் செய்யும் சில தவறுகளினாலும் தலைமுடி பாதிக்கப்படலாம்.

பெரும்பாலானோர் தலைமுடி ஈரமாக இருக்கும் போது சீப்பை பயன்படுத்துவார்கள். ஈரமான தலைமுடி பலவீனமான நிலையில் இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதுப்போன்று ஈரமான தலைமுடியில் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் தலைமுடி மோசமாக சேதமடைகிறது. அந்த தவறுகள் என்னவென்பதைத் தான் இக்கட்டுரையில் உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து இனிமேல் அந்த தவறுகளை செய்யாதீர்கள்.

ஈரமான முடியை சீவுவது

நிறைய பேர் தலைமுடி ஈரமாக இருக்கும் போதே சீவுவார்கள். இப்படி ஈரமான முடியில் சீப்பை பயன்படுத்தும் போது, முடி அதிகமாக சேதமடையும். எனவே உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் முடி உதிர்வதை தடுக்க வேண்டுமென நினைத்தால், முடி முற்றிலும் உலரும் வரை காத்திருந்து பின் சீப்பை பயன்படுத்துங்கள்.

இறுக்கமாக கட்டுவது

தலைக்கு குளித்த பின் பெரும்பாலான பெண்கள் தலைமுடியை இறுக்கமாக கட்டுவார்கள். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், இம்மாதிரியான தவறுகளை அதிகம் செய்வார்கள். ஈரமான முடியை கட்டும் போது, தலைமுடி அதிகம் சேதமடையும். எனவே இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள். இல்லாவிட்டால் கொத்து கொத்தாக முடி கொட்டும்.

தலைமுடியை தேய்ப்பது

தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்துவதற்கு நாம் பெரும்பாலும் துண்டால் துடைப்போம். ஆனால் இனிமேல் அப்படி முடியை உலர்த்தாதீர்கள். ஏனெனில் இச்செயலால் தலைமுடி அதிகம் உடையும் மற்றும் அதிக சிக்கலுமாகும். உங்கள் முடியை உலர்த்த நினைத்தால், மென்மையான துணியால் தலைமுடியை ஒத்தி எடுங்கள்.

ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது

தற்போது பலரது வீடுகளில் முடியை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையர் இருக்கிறது. ஹேர் ட்ரையர் ஈரமான முடியை உலர்த்துவதற்கு தான். ஆனால் இந்த ஹேர் ட்ரையரில் இருந்து வெளிவரும் வெப்பக் காற்று பலவீனமான நிலையில் இருக்கும் ஈர முடியை சேதப்படுத்தும். எனவே முடியை முடிந்தவரை இயற்கையாக உலர்த்துங்கள்.

ஈரமான முடியுடன் தூங்குவது

பலர் இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பார்கள். அப்படி தலைக்கு குளிப்பவர்கள் முடியை முற்றிலும் உலர்த்தாமல் ஈரமான முடியுடனேயே தூங்குவார்கள். இப்படி ஈரமான முடியில் தூங்கினால், தலையணையில் அதிகம் உரசி, அதனால் அளவுக்கு அதிகமாக தலைமுடி சேதமடையும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here