LHDN ஆலோசகர் ஒருவரை அவமதிக்கும் முகநூல் பதிவினை வெளியிட்டதாக பாதுகாப்பு ஊழியருக்கு, 3,000 வெள்ளி அபராதம்

கோலாலம்பூர், அக்டோபர் 20:

இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு வருவாய் வாரியத்தின் (LHDN) ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஷ்பால் சிங் ரந்தாய் என்பவரை அவமதிக்கும் காணொளி ஒன்றை முகநூலில் வெளியிட்டதற்காக ஒரு பாதுகாப்பு ஊழியருக்கு 3,000 வெள்ளிஅபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதி எம்.எம். எட்வின் பரம்ஜோதி முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவரான முஹமட் அலிஸ் அப்துல் மனன் (59) , மீதான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, ​​தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்ட பின்னர், அவருக்கு இந்த தண்டனையை நீதிபதி வழங்கினார்.

ஐந்து குழந்தைகளின் தந்தையான அந்த பாதுகாப்பு ஊழியர், நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்டத் தவறினால் மூன்று மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்டோபர் 4, 2019 அன்று மற்றவர்களை புண்படுத்தும் நோக்கத்துடன், முகநூலில் “அலிஸ் அலிஸ்” என்ற கணக்கினை பயன்படுத்தி, ஒரு அவமதிக்கும் பதிவை செய்ததாக அலிஸ் மீது தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் (CMA) பிரிவு 233 (1) (a) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை அல்லது இரண்டையும் வழங்க இந்த சட்டப்பிரிவு வழிவகுக்கின்றது.

எந்தவொரு வழக்கறிஞராலும் பிரதிநிதித்துவம் செய்யப்படாத குற்றம் சாட்டப்பட்டவரான அலிஸ், குற்றவாளிக்கான தணிப்பின் போது, அவர் ஒரு மாதத்திற்கு 1,300 வெள்ளி மட்டுமே சம்பாதித்து, தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டிப்பதால் , தனக்கு குறைந்தபட்ச தண்டனையை விதிக்கும்படி நீதிமன்றத்திடம் முறையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here