கணவனைக் கொலை செய்ததாக 26 வயதான உமாதேவி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக்டோபர் 26 :

கடந்த வாரம் பத்து மலையில் உள்ள அவர்களது வீட்டில், கணவன் மனைவிக்கு இடையில் நடந்த கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, தனது கணவரைக் கொலை செய்ததாக 26 வயதான பெண்ணுக்கு எதிராக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

செலாயாங் மாவட்டமன்ற நீதிபதி நூர் ஹபிசா ரஜூனியின் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட ஆர். உமாதேவி அதை புரிந்துகொண்டு தலையசைத்தார்.

ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த குற்றஞ்சாட்டப்பட்ட பெண் , கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கம்போங் லக்சமனாவுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் அவரது கணவரான ஏ. முருகனை, 45, கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கொலைக்குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் கட்டாய மரண தண்டனையை வழங்க வழிவகுக்கும்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வழக்கில் துணை அரசு வழக்கறிஞர் அனிஸ் ஃபர்ஹா அஹமட் ஹில்மி அரசு தரப்பில்  ஆஜரானார், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் அவரை பிரதிநிதித்துவம் செய்து இவ்வழக்கில் யாரும் ஆஜராகவில்லை.

இவ்வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் நவம்பர் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த புதன்கிழமையன்று , கோம்பாக் காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் ஜைனல் முஹமட் முஹமட் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் தனது 26 வயது மனைவியை துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி, ஒரு ஜோடி கத்தரிக்கோலால் தாக்க முயன்றபோது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பின்னர் குடையொன்றைப் பிடித்து, அதை பாதியாக உடைத்து, அவரை பழிவாங்கும் நோக்கத்தில் குடையின் கூரிய கம்பத்தால் தனது கணவரின் வயிற்றில் குத்தியதாகக் கூறினார்.

“இறந்தவர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் நினைத்த பாதிக்கப்பட்டவரின் அண்டை வீட்டாரால் இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்றும் அவர் கூறினார்.

மேலும் நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, வீட்டின் பின்புறத்தில் இருந்த கொலைக் கருவியை (குடைக்கம்பி) மீட்டோம் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here