கோலாலம்பூர், அக்டோபர் 27 :
அடுத்த ஆண்டு ஜெனிவாவில் கூடும் 75 ஆவது உலக சுகாதார சபையின் (WHA) துணைத் தலைமைப் பதவிக்கு மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சபை (WHA) 194 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது மற்றும் இது உலக சுகாதார அமைப்பை (WHO) நிர்வகிக்கும் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும்.
ஜப்பானின் ஹிமேஜியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (அக் 29) வரை நடைபெறும் 72 ஆவது உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்தியக் குழுக் கூட்டத்தில் (WPRCM) இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், மலேசியாவை ஒருமனதாக இந்த தகுதியான பதவிக்கு பரிந்துரைத்த அனைத்து WHO பசிபிக் பிராந்திய உறுப்பு நாடுகளுக்கும் இன்று ஒரு டுவீட்டில் நன்றியைத் தெரிவித்தார்.
“2022 உலக சுகாதார சபைக்கு மலேசியாவை துணைத் தலைவராக ஒருமனதாக பரிந்துரைத்த அனைத்து @WHOWPRO நாடுகளுக்கும் நன்றி” என்று டுவீட் செய்திருந்தார்.
“உலக சட்டசபைக்கு மேற்கு பசிபிக் பகுதியின் குரலை நாம் கொண்டு வருவோம், குறிப்பாக சமத்துவம், ஒற்றுமை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகள் தொடர்பாக மலேசியா குரல் கொடுக்கும் ” என்று அவர் கூறினார்.
மலேசியாவைத் தவிர, WHO மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், புருணை, கம்போடியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 36 உறுப்பு நாடுகள் உள்ளன.
“WHA இன் துணைத் தலைமைப் பதவியை மலேசியாவிற்கு வழங்குவது உண்மையிலேயே ஒரு பெரிய மரியாதை, மேலும் உலகளாவிய ஆரோக்கியத்தில் ஒரு பெரிய பங்கைத் தொடர இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்துவோம்.
“மேலும் மலேசியா 2021 முதல் 2024 வரை உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவில் பணியாற்றுகிறது குறிப்பிடத்தக்கது ” என்று அவர் ட்டுவீட் செய்துள்ளார்.
75 ஆவது WHA அடுத்த ஆண்டு மே 22 முதல் மே 28 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
மேலும் மலேசியா கடந்த 2016 இல் 69 வது WHA இன் துணைத் தலைமைப் பதவியில் பணியாற்றியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .