கேமரன்மலையில் பெய்த கனமழையால் அங்கு 12 இடங்களில் நிலச்சரிவு ; ஒருவர் காயம்

கோலாலம்பூர், நவம்பர் 22 :

இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, இங்குள்ள கேமரன்மலைப்பகுதியில் 12க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்ததில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

கேமரன் ஹைலேண்ட்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் சுல்ரைம் செமன் இதுபற்றிக் கூறுகையில், தனா ரட்டாவில் உள்ள விடுதி ஒன்றின் அருகே மீது பல மரங்கள் விழுந்ததில், அங்கிருந்த ஒரு கார் மோசமாக சேதமடைந்தது என்றார்.

அப்போது அந்தக் காரில் நான்கு பேர் இருந்ததாக அவர் கூறினார். அதில் இருவர் வாகனத்தில் சிக்கிக் கொண்டனர்.

“நாங்கள் அவர்களை வாகனத்திலிருந்து வெளியே கொண்டு வந்தோம், ஆனால் அவர்களில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. மேலும் இருவர் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றார்.

நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் மலைப்பகுதிகளில் உள்ள பல சாலைகள் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன என்று சுல்ரைம் கூறினார்.

பிக் ரெட் ஸ்ட்ராபெரி (Big Red Strawberry), ஸ்ட்ராபெரி பார்க், போ சுங்கை பலாஸ் (Boh Sungai Palas) செல்லும் பாதை, வாட்டர் க்ரெஸ்டுக்கான (Water Crest) பாதை, ரோஸ் வேலி (Rose Valley), தாமான் எம்சிஏ, தாமான் பெலாங்கி, ரிங்லெட் மற்றும் தாபாவில் உள்ள பத்து 20 ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் இவற்றில் அடங்கும்.

“பாதிக்கப்பட்ட சாலைகள் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு, முதலில் அங்கு துப்புரவு பணிகள் நடத்தப்பட வேண்டும்” என்று சுல்ரைம் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here