போலீசாரிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த இருவரில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்

கெப்பாளா பாத்தஸ், நவம்பர் 25 :

நேற்று அதிகாலை, கோத்தா கோலமூடாவில் உள்ள கோம்ப்ளெக்ஸ் பாசார் பிசிக் இக்கான் என்ற இடத்தில், போலீசாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆற்றினை நீந்திக்கடக்க முயன்ற இருவரில், ஒருவரது சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காலை சுமார் 9.30 மணியளவில் கெடாவில் உள்ள புலாவ் சயாக் கடற்பரப்பில் 37 வயதுடைய நபரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.

அந்த நபர் குதித்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூலாவ் சயாக்கில் இன்று காலை, அவரது உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று செபெராங் பிராய் உதாரா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ரட்ஸி அஹமட் தெரிவித்தார்.

“அந்த ஆணின் உடல் பிரேத பரிசோதனைக்காக கப்பாளா பத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

கெப்பாளா பாத்தஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டு, அங்குள்ள கோவிட்-19 தரநிலை செயல்பாட்டு நடைமுறைகளுக்கு இணங்குவதைச் சோதித்தனர்.

அப்போது, கோம்ப்ளெக்ஸ் பாசார் பிசிக் இக்கான் என்ற இடத்தில், நேற்று அதிகாலையில் போலீசார் அத்துமீறி நுழைந்தபோது, அங்கு கூடியிருந்த ஆண்களின் குழு ஒன்று தலைதெறிக்க ஓடியது.

அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக சிலர் அவ்வளாகத்தை ஒட்டிய ஆற்றில் குதித்தனர்.

ஆற்றில் குதித்தவர்களில் இன்னும் ஒருவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் முகமட் ராட்ஸி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here