கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் குறித்து கொள்ளை கும்பலுக்கு தகவல் – 4 அமலாக்க அதிகாரிகள் கைது

கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் குறித்த கொள்ளை கும்பலுக்கு தகவல்களை கசியவிட்டதாக அரசாங்க நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 முதல் 49 வயதுடைய நான்கு அமலாக்க அதிகாரிகளைத் தவிர, கைப்பற்றப்பட்ட மதுபானங்களைத் திருடுவதற்காக டெங்கிலில் உள்ள சேமிப்புப் பகுதியை உடைத்த இரண்டு சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று துணைப் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ஜெனரல் மஸ்லான் லாசிம் தெரிவித்தார். ஏஜென்சியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

கடந்த வியாழன் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் மூன்று பேர் லோரி ஒன்றில் சேமிப்புப் பகுதிக்குள் நுழைந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக மஸ்லான் கூறினார். பிடிக்கப்பட்ட லோரியில் இருந்த மதுபானங்களை இறக்குவதற்கு முன்னர் சந்தேக நபர்கள் பாதுகாவலர்களைக் கட்டிப்போட்டு அவர்கள் ஓட்டி வந்த மற்றொரு  லோரியில் ஏற்றியுள்ளனர்.

ஹரியான் மெட்ரோவில் ஒரு அறிக்கையின்படி, பொருட்களை ஏற்ற 2 மணி நேரம் பிடித்ததாகவும் சந்தேக நபர்கள் அதிகாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு  சென்றனர்  என்று தெரிவித்தது.

ஷா ஆலமில் ஒரு சாலையோரத்தில் திருடப்பட்ட பொருட்களுடன்  லோரியில் இருந்த மூன்று சந்தேக நபர்களில் இருவரை போலீசார் கைது செய்ய முடிந்தது என்று அவர் கூறினார். லோரியில் இருந்த 234 மதுபானப் பெட்டிகள் சேமிப்புப் பகுதியில் இருந்து திருடப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

அறிக்கையின் அடிப்படையில், நான்கு அமலாக்க அதிகாரிகளின் ஈடுபாட்டைக் கண்டுபிடித்ததாகவும், அவர்களிடமிருந்து சுமார் RM559,000 மதிப்புள்ள ஆம்பெடமைன் போதைப் பொருட்களைக் கைப்பற்றியதாகவும் மஸ்லான் கூறினார்.

நாங்கள் மின்னணு தராசுகள், மொபைல் போன்கள் மற்றும் RM111,100 பணம் ஆகியவற்றையும் கைப்பற்றினோம்  என்று அவர் கூறினார். விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர்கள் ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பதாக கருதப்படும் மற்றொரு சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here