தென்னாப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்திறங்கிய பயணிகள் இருவருக்கு முதற்கட்டப் பரிசோதனையில் ‘ஓமிக்ரான்’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுவோரில் ஒருவர் 44 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி, மற்றொருவர் 41 வயது சிங்கப்பூரியர் ஆவார்.
மொஸாம்பிக்கிலிருந்து ஜொகன்னஸ்பர்க் வழி சிங்கப்பூர் வந்த அந்த 44 வயது ஆடவர், நவம்பர் 29ஆம் தேதியன்று செய்துகொண்ட கொவிட்-19 பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது. அதேபோன்று அந்த 41 வயது மாதுவும் பரிசோதனை செய்துகொண்டு தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டவர்.
இருவரும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர். தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் அவ்விருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சு கூறியது.
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள அவர்களிடம் இருமல் உள்ளிட்ட மிதமான அறிகுறிகள் தென்பட்டன.
தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவ்விருவரும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்திறங்கினர். வந்திறங்கியவுடன் அவர்கள் ‘பிசிஆர்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இருவருக்கும் தொற்றியது ‘ஓமிக்ரான்’ கிருமி வகைதானா என்பதை தேசிய பொதுச் சுகாதார ஆய்வுக்கூடம் ஆராய்ந்து வருகிறது. இருவருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த மற்ற 19 பயணிகளுக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 நாட்கள் தனிமை உத்தரவு முடிந்தபின் மீண்டும் ‘பிசிஆர்’ பரிசோதனையை அவர்கள் செய்துகொள்ள வேண்டும்.
இதற்கிடையே, புதிய ‘ஓமிக்ரான்’ உருமாறிய கிருமியால் ஏற்படக்கூடிய கடும் பாதிப்புகளுக்கு எதிரான பாதுகாப்பைத் தடுப்பூசிகள் வழங்கும் சாத்தியம் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொள்ளைநோய்க்கு எதிராகப் போராடுவதில் மிகப் பயனுள்ள ஆயுதமாகக் கருதப்படும் தடுப்பூசியை இப்புது வகை கிருமி ஆற்றலில் மிஞ்சிவிடலாம் என்று மக்களிடையே எழுந்துள்ள கவலையைத் தணிக்க நிறுவனம் இவ்வாறு கூறியிருந்தது.
“தடுப்பூசிகள் ஒருவிதப் பாதுகாப்பை வழங்குகின்றன என்பது நாம் அறிந்ததே. இருப்பினும், பாதுகாக்கும் ஆற்றல் குறைந்துள்ளதா என்பதை நாம் கண்டறிய வேண்டும். ஆனால், மற்ற உருமாறிய கிருமி வகைகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் தடுப்பூசிகளால் கடும் நோயை எதிர்க்க முடியும் என்று கருதுகிறோம்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறினார்.
இதற்கிடையே ‘ஓமிக்ரான்’ வகையைக் கையாள்வதற்கென புதிய தடுப்பூசிகள் தேவைப்படுவதாக ‘மொடர்னா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். ‘ஓமிக்ரான்’ வகையைக் குறிவைக்கும் ஆற்றல் கொண்ட கொவிட்-19 கூடுதல் தடுப்பூசி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் பயன்பாட்டுக்கு வரலாம் என்றும் நிறுவனம் தெரிவித்தது.