13 வயது மகள் பாலியல் வன்முறை – தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை, 10 பிரம்படி

கோத்தா கினபாலு, டிசம்பர் 3 :

13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, விவாகரத்து பெற்றவரும் சிறுமியின் தந்தையுமான ஆடவருக்கு, நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 தடவைகள் பிரம்படித் தண்டனையும் விதித்தது.

39 வயதான அந்த நபர், தனது 13 வயது மகளை ஜூலை 2020 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வரை பியூஃபோர்ட்டில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. நேற்று விசாரணைக்கு முந்தைய வழக்கு நிர்வாகத்தின் போது, தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொண்ட அந்த நபர், தனது தரப்பு மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

வழக்கினை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்ரீனா அஜீஸ், அந்த நபரின் சிறைத்தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர், அவரை இரண்டு ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(3)ன் கீழ், இக் குற்றத்திற்கு 8 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 10 பிரம்படிகளும் விதிக்க வழி செய்கிறது.

வழக்கின் உண்மைகளின்படி, அந்த நபரின் முன்னாள் மனைவி பிப்ரவரி 6 ஆம் தேதி தனது மகளை அழைத்து வருவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, ​​தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தனது தந்தையால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார். சமீபத்திய சம்பவம் இந்த ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று நடந்தது.

இதையடுத்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். தந்தை திட்டுவாரோ என்ற பயம் காரணமாக தனது குடும்பத்தினரிடம் இச்சம்பவத்தை முதலில் கூறவில்லை என்று விசாரணை அதிகாரிகளிடம் சிறுமி கூறியுள்ளார்.

​​குற்றம் சாட்டப்பட்டவர், தான் முதல் முறை குற்றவாளியாகியுள்ளதாகவும், நீதிமன்றத்தின் நேரத்தை மிச்சப்படுத்த தான் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறி, மன்னிப்பும் கேட்டார்.

துணை அரசு வழக்கறிஞர் அதிபா சைபுல் பஹ்ரி, இது ஒரு கடுமையான குற்றம் என்ற அடிப்படையில் குற்றவாளிக்கு சிறைத் தண்டனையை வழங்க வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here