குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து : இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 12 பேர் உயிரிழப்பு

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று(டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது. இதில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் உள்பட 10 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை.

சம்பவ இடத்தில் நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தினர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு, விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்

01. முப்படை தளபதி விபின் ராவத்
02. மதுலிகா ராவத்
03. பிரிகேடியர் லிடர்
04. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
05. குர்சேவர் சிங்
06. ஜிஜேந்தர் குமார்
07. விவேக் குமார்
08. சார் தேஜா
09. கவில்தார் சத்பால்

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் ஐஏஎப் எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் என்றும், இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்துள்ளார் என்றும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here