சூரியன் போன்ற நட்சத்திரம் வெடித்து சிதறும் ஆபத்து; மனித இனத்துக்கு பாதிப்பு – விஞ்ஞானிகள் கவலை

நம் சூரியக் குடும்பம் போன்ற பல கிரக அமைப்புக்கள் பால் வீதியில் நிறைந்துள்ளன. அந்த வகையில் பால் வீதி மண்டலத்தில் உள்ள சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஏகே டிராகோனிஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த பெரிய நட்சத்திரம் அளவில் நம் சூரியனை போன்றதாக உள்ளது. சூரியனில் நடைபெறும் வெடிப்புக்கள் போல இந்த நட்சத்திரத்திலும் பெரும் வெடிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நட்சத்திரத்தை பூமியில் இருந்தும் விண்வெளியில் இருந்தும் தொலைநோக்கிகள் மூலம் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜப்பானின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் விஞ்ஞானி யுடா நோட்சு உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், இந்த  ஏகே டிராகோனிஸ் நட்சத்திரத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.  அவர்கள் ‘கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன்’ என்று அழைக்கப்படும் ஒரு நட்சத்திர வெடிப்பு ஆராய்ந்து வந்தனர். இதுகுறித்து அவர்கள்  நேச்சர் அஸ்ட்ரோனமி இதழில் டிசம்பர் 9 ஆம் தேதி தங்கள் முடிவுகளை வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு;-
‘கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன்’ என்பது, நமது சூரியனைப் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களின் மேற்பரப்பில் நிகழக்கூடிய வெடிப்பு நிகழ்வு ஆகும். இத்தகைய வெடிப்புகளின் காரணமாக வெளியாகும் பிளாஸ்மா அல்லது வெப்பமான துகள்கள், ஒரு மணி நேரத்திற்கு மில்லியன் கணக்கான மைல்கள் வேகத்தில் விண்வெளியில் பயணிக்கும். அதன் வழியில் இருக்கும் கோள்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இது நமது பூமியின் மீது மோதினால், மனித இனத்துக்கு பெரும் ஆபத்தும் ஏற்படக் கூடும். பூமியை சுற்றி வரும் என்னற்ற செயற்கைகோள்கள் கருகிவிடக்கூடும், அதனால் பூமியில் தொலைத்தொடர்பு, மின்சார சப்ளை நிறுத்தம், ரேடியேஷன் என பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
இத்தகைய ‘கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன்’ நிகழ்வு தான் தற்போது ஏகே டிராகோனிஸ் நட்சத்திரத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்த நிகழ்வு நமது சூரியனிலும் நிகழக்கூடியதாகும். ஆனால் அது பல ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நமது சூரியனை ஒப்பிடுகையில் இந்த ஏகே டிராகோனிஸ் நட்சத்திரம் மிகவும் வயது குறைந்த கோள் ஆகும். இது தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் அளவில் மட்டுமே இருக்கக் கூடும். அதே சமயம் நமது சூரியனின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்த நட்சத்திரம் குறித்து மேலும் ஆய்வு செய்வதன் மூலம் நமது சூரியனின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் மற்றும் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சூரிய புயல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here