கூலிம், டிசம்பர் 13 :
அஜாக்கிரதையாக பேருந்து ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தொடர்பில் வெளியான காணொளி தொடர்பில், நேற்று சுங்கை காரங்கான் காவல் நிலையம் முன்பு அந்த பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சசலீ ஆடாம் கூறுகையில், பேருந்து ஓட்டுநரின் செயல்கள், அவரைப் பின்தொடர்ந்த பொது வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
அவரது கூற்றுப்படி, நேற்றுக்காலை 11.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பேருந்து ஓட்டுநர் சாலையின் ஓரத்திலும் நடுவிலும் ஓட்டுவதைக் காணொளியில் காணமுடிந்தது. மேலும் பெக்கான் பாடாங் செராய்க்கு வந்தவுடன், சந்தேக நபர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பக்க கண்ணாடியையும் தாக்கினார்.
“இருப்பினும், அவரைப் பின்தொடர்ந்த பொதுமக்கள், சுங்கை காரங்கான் காவல் நிலையத்திற்கு முன்பாக அந்த நபர் ஓட்டிச் சென்ற பேருந்தை வழிமறித்து நிறுத்தினர்,” என்றார்.
கைதுசெய்யப்பட்ட 44 வயதான சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளில், அவர் மெத்தம்பேட்டமைனுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் விசாரணையில், ‘சந்தேக நபருக்கு எதிராக 51 போக்குவரத்துக்கு குற்றப்பதிவுகள், 5 பிடியாணைகள் மற்றும் 2019 ஆம் ஆண்டு அவருக்கு எதிரான போதைப்பொருள் வழக்கு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்காக, சந்தேகநபர் போலீஸாரால் தேடப்பட்டு வருவதாக” அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேராக், தைப்பிங்கைச் சேர்ந்த சந்தேக நபர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பேருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதோடு, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதாகவும் மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக சசலீ கூறினார்.
“சந்தேக நபர் ஓட்டிச் சென்ற பேருந்து, சுங்கை பட்டாணி முதல் பேலிங் வரையான பயணத்தின்போது, அவர் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்றும் நாங்கள் கண்டறிந்தோம்.
“சந்தேக நபர் நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் பேருந்தை ஆபத்தான முறையில் ஓட்டிய நபரின் நோக்கம் குறித்து நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.