Ikatan Demokratik Malaysia (மூடா) ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான கடிதத்தை உள்துறை அமைச்சகம் வெளியிடும் என்று அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் கூறினார்.
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் பல கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்யமாட்டேன், மேல்முறையீடு இல்லாதபோது, மூடாவுக்கான பதிவுக் கடிதத்தை வழங்குவோம் என்று அவர் இன்று இங்கு அருகில் உள்ள பத்து 18, கம்போங் ஜாவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிசம்பர் 14 அன்று, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உள்துறை அமைச்சருக்கு 14 நாட்களுக்குள் மூடாவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது.
மூடாவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான முறையீட்டை நிராகரித்த அமைச்சர் மற்றும் சங்கங்களின் பதிவிலாகாவின் முடிவை எதிர்த்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் மற்றும் 12 பேர் தாக்கல் செய்த நீதித்துறை மறுஆய்வு மனுவை அனுமதித்து நீதிபதி நூரின் பதாருதீன் இந்த தீர்ப்பினை வழங்கினார்.