கோலாலம்பூர், டிசம்பர் 21 :
கடந்த 24 மணி நேரமாக பல மாநிலங்களில் கனமழை பெய்யவில்லை. இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சற்று நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. அதே வேளை இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக பதிவாகியுள்ளது.
சிலாங்கூரில் 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன, அதே சமயம் பகாங்கில், பெந்தோங் வெள்ளத்தில் மேலும் 4 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது.
இதன் மூலம் 8 மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 66,939 பாதிக்கப்பட்டவர்கள் சிலாங்கூர், பகாங், திரெங்கானு, கிளந்தான், நெகிரி செம்பிலான், மலாக்கா, பேராக் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள 466 வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சமடைந்துள்ளனர்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமட் இதுபற்றிக் கூறுகையில், சிலாங்கூரின் ஷா ஆலமில் நான்கு இறப்புகளைத் தவிர, காஜாங்கில் மேலும் இரண்டு இறப்புகளும், சுங்கை பூலோ மற்றும் செப்பாங்கில் தலா ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன என்றார்.