காஜாங், டிசம்பர் 27 :
மாலை 4 மணி முதல் பெய்த கனமழையால், மாவட்டத்தில் உள்ள பல முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் லங்காட் ஆற்றின் நீர் மட்டம் அபாய நிலையில் உள்ளதாகவும் அறியமுடிகிறது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) இயக்குநர் நோரஸாம் காமிஸ் இதுபற்றிக் கூறுகையில், காஜாங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பாக, தமது துறைக்கு பல அவசர அழைப்புகள் வந்ததாகக் கூறினார்.
பாதிக்கப்பட்ட இடங்களாக லாங் ரிவர் டவுனில் உள்ள ஜியென் கோர்ட் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் Luxury Valley Park பகுதிகள் ஆகியவை அடங்கும்.
“வெள்ளப் பெருக்கு சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு மாலை 5.19 மற்றும் 5.35 மணிக்கு அழைப்புகள் வந்தன.
“தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்போதைய நிலைமையை கண்காணித்தனர்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
கனமழை தவிர, வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் பெருக்கெடுத்து பிரதான சாலையில் ஓடியதுதான் வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்றார்.
“தீயணைப்புப் படை எப்போதும் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், நிலைமை மேலும் தீவிரமானால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார் நிலையில் இருக்கும்.
“பொதுமக்கள் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு, விரைவில் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
ஜலான் சுங்கை ஜெலோக், பண்டார் டெக்னாலஜி காஜாங், காஜாங் 2 மற்றும் ஜாலான் காஜாங்-செமினி ஆகிய பகுதிகள் திடீர் வெள்ளத்தால் வெள்ளத்தில் மூழ்கியதாக உள்ளூர்வாசிகளால் சமூக ஊடகங்களில் பல பகிர்வுகள் காட்டுகின்றன.