“சாதிக்க நினைப்பதை மலேசியாவிலேயே சாதிக்க முடியும், வெளிநாடு செல்லத் தேவையில்லை” விருது பெற்ற பிரபல பொறியியலாளர் டத்தோ (Ir) என்.புருஷோத்தமன் கூறுகிறார்

* 25 நாடுகளுக்கு மேல் பணி நிமித்தம் சென்றிருக்கிறேன். இருந்தாலும் இன்று மலேசியாவிலேயே தொழில் புரிந்து வருகிறேன்.

* எந்த சிபாரிசுமின்றி பகாங் அரசாங்கத்தின் உபகாரச் சம்பளங்களைப் பெற்றேன்.

டத்தோ (Ir) என்.புருஷோத்தமன் ஒரு சிறந்த உலகளாவிய மின்சாரத் துறை பொறியியலாளர் (இன்ஜினியர்). அஃப்ரிமா (AFRIMA CONSULTING ENGINEER SDN BHD) என்னும் ஒரு சிறந்த பொறியியலாளர் நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப இயக்குநர். இவருடைய சேவையைப் பாராட்டி அண்மையில் இவருக்கு டத்தோ பட்டம் மலாக்கா அரங்சாங்கத்தால் வழங்கப்பட்டது.

“IEM Award for Contribution to Engineering Industry in Malaysia 2019” எனும் விருது புருஷோத்தமன் சார்ந்த அஃப்ரிமா பொறியியல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மலேசிய பொறியியலாளர் சங்கத்தின் (IEM) 2019ஆம் ஆண்டுக்கான மலேசியாவில் பொறியியல் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய நிறுவனம் என்ற கௌரவத்தைக் கொண்ட விருதாகும் இது.

நிறுவனத்தின் சார்பில் அந்த விருது பெற்றிருக்கும் புருஷோத்தமன் வாழ்க்கையில் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தான் வெற்றி அடைந்ததற்கான காரணங்களை மக்கள் ஓசைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் விவரித்தார். சாதாரண பின்னணி கொண்ட குடும்பத்தில், பகாங் மாநிலத்தின் மெந்தகாப் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர் புருஷோத்தமன். தந்தையார் நாராயணன் நாயர், தெமர்லோ ஜேகேஆர் பொதுப் பணி இலாகாவில் பணிபுரிந்தவர். தாயார் மாதவி. பெற்றோர் இருவரும் புருஷோத்தமனின் வெற்றிகளைப் பார்க்க இன்று உயிருடன் இல்லை என்பது ஒரு சோகம். புருஷோத்தமனுக்கு 3 தங்கைகள் உண்டு. ஐந்தாம் படிவம் முடித்ததும் குவாந்தான் போலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் எனப்படும் பொறியியல் துறையில் சர்ட்டிபிகேட் சான்றிதழ் பெற்றார். அதைத் தொடர்ந்து தேசிய மின்சார வாரியத்தில் வேலை கிடைத்தது. பின்னர் கோத்தா பாருவில் டிப்ளோமா முடித்தவுடன் மீண்டும் தேசிய மின்சார வாரியத்திற்கே வேலைக்குத் திரும்பினார். தொடர்ந்து டெக்னோலோஜி மலேசியா பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் (Civil Engineering) பட்டப் படிப்பு முடித்தார்.

இருந்தாலும், கல்வித் துறையில் முன்னேற வேண்டும் என்ற தாகமும் – தான் சார்ந்த தொழில் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்ற வேட்கையும் – ஒருங்கிணைய தொடர்ந்து படித்து இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.

முதலாவது முதுகலைப் பட்டம் கட்டுமான நிர்வாகத் துறையிலும் இரண்டாவது முதுகலைப் பட்டம் நிலவியல் தொழிற்நுட்பத் துறையிலும் (MEng Civil-Geo technics) பெற்றார். தேசிய மின்சார வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, எல்லா இளைஞர்களுக்கும் இருக்கும் வெளிநாட்டு மோகம் புருஷோத்தமனையும் பீடித்தது. 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சென்றவர் அங்கு ஓராண்டு காலம் பணிபுரிந்த பின்னர், குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றார்.

2014ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் தான் சார்ந்த பொறியியல் துறையிலும் பவர் பிளான்ட் எனப்படும் மின் ஆற்றல் உற்பத்தித் துறையிலும் பணிபுரிந்தார். பின் ஏன் அவர் மலேசியா திரும்ப நேர்ந்தது?

மக்கள் ஓசையுடனான நேர்காணலில் நாம் முன் வைத்த கேள்விகளுக்கான அவரின் பதில்களிலிருந்து அதற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

கே: இங்கிலாந்தில் பணி புரிந்தபோது நீங்கள் அந்த நாட்டில் சாதகமாகப் பார்த்த அம்சங்கள் என்ன?

ப:அங்கு நல்ல சொகுசான வாழ்க்கை கிடைத்தது. தொழிலில் முன்னேற்றம் காண முடிந்தது. பல சிறந்த பயிற்சிகளையும் தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
ஆனால், அங்கு நாம் செலுத்த வேண்டிய வருமான வரி அதிகம். சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகை வருமான வரிக்கே போய் விடும்.

கே: மீண்டும் மலேசியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

ப: நல்ல தொழில்ரீதியான வாழ்க்கை அமைந்தாலும் மலேசியா மீதான காதல் எனக்குக் குறையாமலேயே இருந்தது. இங்குள்ள உணவுப் பழக்கங்கள், உறவினர்கள், நண்பர்கள் சகவாசம், சிறப்பான சீதோஷ்ண சுற்றுச்சூழல், கலாச்சாரம் இப்படி பல காரணங்களுக்காக மலேசிய வாழ்க்கையை நான் இழந்துவிட்டதாக உணர்ந்தேன். 25 நாடுகளுக்கு பணி நிமித்தம் நான் சென்றிருந்தாலும் மலேசிய வாழ்க்கையை மிகவும் தவறவிட்டு விட்டதாக கருதினேன். மலேசியாவில் நான் சம்பாதித்ததை விட பத்து மடங்கு அதிகமாக இங்கிலாந்தில் சம்பாதித்தேன். அங்கிருந்த வாழ்க்கைத் தரமும் உயர்வானதாக இருந்தது. என் மகள் இங்கிலாந்து வாழ்க்கையை ரசித்து அனுபவித்தார். ஆனால் என் மனைவியோ மலேசிய வாழ்க்கையைத் தவறவிட்டு விட்டதாக உணர்ந்தார். நான் 25 நாடுகளில் வேலை செய்திருந்தாலும் மலேசியாவில் இருக்கும் சிறப்பை வேறு எங்கும் கண்டதில்லை. எனவே நாடு திரும்புவோம். பிடித்தமான வாழ்க்கையை வாழ்வோம் என நாங்கள் முடிவு செய்தபோது, டெலண்ட் கோர்ப் (Talent Corp) என்ற மலேசிய அரசாங்க அமைப்பின் மூலம் மீண்டும் நாடு திரும்ப வாய்ப்பு கிடைத்தது. டெலண்ட் கோர்ப் மூலம் நாடு திரும்புவதால் சில சலுகைகள் கிடைத்தன. உதாரணமாக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பதினைந்து விழுக்காடு மட்டுமே வருமான வரி. இரண்டு கார்களை வரி ஏதுமின்றி நாட்டுக்குள் கொண்டு வரலாம். குடும்பத்தினருக்கும் சில சலுகைகள் கிடைத்தன. இப்படியாக இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் நாடு திரும்பினேன்.

கே:அவ்வாறு நாடு திரும்பிய பின்னர் இங்கிலாந்திலேயே இருந்திருக்கலாம். ஏன் மலேசியா வந்தோம் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா?

ப: இல்லவே இல்லை. இன்று வரை ஒரு கணம்கூட அவ்வாறான எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. நாடு நமக்கு என்ன செய்தது என்பதைவிட நாட்டுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் எனது கவனம் இருந்தது. சில நண்பர்களுடன் இணைந்து இந்த அஃப்ரிமா என்ற பொறியியல் நிறுவனத்தைத் தொடங்கினோம். உயர் ரக மின்சாரக் கம்பிகள் (HIGH VOLTAGE POWER LINE) நிர்மாணிக்கும் தொழில்களில் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைத்தன. எங்களின் தொழில் நிமித்தப் பணிகளை சிறப்பான முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் நிறைய சாதித்திருக்கிறோம். 52 முழு நேர ஊழியர்களைக் கொண்டு நிறுவனத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம். பதினைந்து நாடுகளில் வெவ்வேறு திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளுக்கு போதும் என்னும் அளவுக்கு குத்தகைப் பணிகளைக் கைவசம் வைத்திருக்கிறோம்.

புதிய இளம் பொறியியலாளர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்களை உருவாக்குகிறோம். எங்களின் பணிகள், சிறப்பான தொழில் நுட்பம் ஆகியவை காரணமாகவே மலேசிய பொறியியலாளர் சங்கத்தின் பொறியியல் துறைக்கான சிறந்த பங்களிப்பு வழங்கிய நிறுவனம் என்ற விருது எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதைப் பெற்ற மற்ற நிறுவனங்கள் பங்குச் சங்தையில் பட்டியலிடப்பட்ட பெரிய நிறுவனங்களாகும். இந்த வகையில் இந்த விருதை பெருமையாகக் கருதுகிறோம். ஏற்கெனவே, கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்தியர் வர்த்தகர் சபையின் சிறப்பு விருதையும் நாங்கள் பெற்றிருக்கிறோம்.

கே: இத்தனை ஆண்டுகளில் உங்கள் நிறுவனம் எந்தத் துறைகளில் அதிகமான ஈடுபாடு கொண்டிருக்கிறது?

ப: குறிப்பாக தேசிய மின்சார வாரியம் செயல்படுத்தும் மின்சாரம் தொடர்பான திட்டங்கள், சூரியசக்தி உற்பத்தி நிலையங்கள், பசுமை மறுசுழற்சித் திட்டங்கள் போன்ற நவீனமயத் திட்டங்களில் நாங்கள் அதிகம் ஈடுபடுகிறோம்.
பாரம்பரியமான நிலக்கரி மூலம் மின்னாற்றல் உற்பத்தி – போன்ற திட்டங்கள் எதிர்காலத்தில் இருக்காது. அதற்கான நிதி உதவி யும் கிடைக்காது என்பதால் நாங்கள் பசுமை சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

கே: மீண்டும் மலேசியா திரும்பி இங்கேயே தொழில் புரிவதால் வித்தியாசம் ஏதாவது உணர்கிறீர்களா?

ப:என்னைப் பொறுத்தவரையில் நமது நாடு உலகின் சிறந்த நாடு களில் ஒன்று. பலரும் கூறுவது போல் முன்னேறுவதற்கு இங்கு தடைகளும் இடையூறுகளும் கிடையாது.

அரசாங்க ரீதியாக நல்ல உதவிகளும் கிடைக்கின்றன. நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணத் திற்கு நான் பகாங் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு யாயாசான் பகாங் என்ற மாநில அரசாங்க அமைப்பு மூலம் மேற்படிப்புக்காக உபகாரச் சம்பளம் கிடைத்தது. அதேபோல என் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கிடைத்தது. நாங்கள் யாரிடமும் சிபாரிசுக்காகச் சென்றதில்லை. நாங்கள் முறைப்படி எழுதிப் போட்டோம். எந்த பிரச்சினையு மின்றி எங்களுக்கு உபகாரச் சம்பளம் கிடைத்தது. அதன் மூலமே என்னால் கல்வியிலும் முன்னேற முடிந்தது.

பாகிஸ்தான், வங்காளதேசம், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு வந்த பல தொழிலாளர்கள் இங்கேயே தொழிலிலும் வணிகத்திலும் ஈடுபட்டு நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். நான் இதுவரையில் எனது பணி நிமித்தமாக 25 நாடுகளுக்கும் கூடுதலாக சென்றிருக்கிறேன். அத்தனை நாடுகளிலுமுள்ள வசதி வாய்ப்புகளையும் ஆராய்ந்த பின்னர்தான் மலேசியாவிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்தேன். நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகளும் உள்ளூர் இடையூறுகளும் இருந்து கொண்டு தான் இருக்கும். மலேசியாவும் அப்படித்தான். அதைப் புரிந்து கொண்டால் நீங்கள் இங்கேயே நிறைய சாதிக்கலாம். வெளிநாடு சென்று தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை.

கே: அப்படியானால் இன்றைய இளைஞர்கள் வெளிநாடுகளுக்கே தொழில் உயர்வுக்காக செல்லக்கூடாது என்கிறீர்களா?

ப: எனது அறிவுரை என்னவென்றால், நீங்கள் இளம் வயதில் கண்டிப்பாக வெளிநாட்டுக்குத் தொழில் நிமித்தம் செல்லலாம். அதை ஓர் அனுபவமாகக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் பயிற்சிகளையும் தொழில் நுணுக்கங்களையும் நன்கு கற்றுக் கொள்ளுங்கள். குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று அங்கு கிடைக்கும் வித்தியாசமான வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுங்கள். ஆனால் பிள்ளைகள் பருவ வயதைத் தாண்டும் முன்னரே மீண்டும் மலேசியாவுக்குத் திரும்பவும் அழைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தாங்கள் தங்கியிருக்கும் நாட்டில் வேரூன்றும் – அங்கேயே தங்கும் எண்ணம் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படாது.

வெளிநாட்டில் கிடைக்கும் உயரிய வருமானம், நல்ல வாழ்க்கைத்தரம், தொழில் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் மலேசியா திரும்பி உங்களையும் உயர்த்திக் கொள்ளுங்கள். நாட்டுக்கும் பயனாக இருங்கள். நமது சிறந்த மலேசிய வாழ்க்கைச் சூழலையும் அனுபவித்து வாழுங்கள்.

கே: உங்களின் அனுபவத்தில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு குறிப்பாக முன்னேறத் துடிக்கும் இந்திய இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் அனுபவ அறிவுரை என்ன?

ப: என்னைப் பொறுத்தவரையில் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் கடுமையான உழைப்பை வழங்குங்கள். அதேவேளையில், உங்கள் மீது தன்னம்பிக்கை கொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள். நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய இன்னொரு முக்கிய குணாதிசயம் பொறுமை. செய்யும் பணிகளில் வெற்றியை நோக்கி நாம் முன்னோக்கி நகரும் வேளையில், பொறுமையுடன் பணியாற்றுவது மிகவும் முக்கியம். இன்னொரு முக்கிய சித்தாந்தத்தை எப்போதும் கருத்திலும் கவனத்திலும் கொள்ளுங்கள். ஒரு தொழிலில் அதற்குரிய ஆர்வத்தோடும் காதலோடும் ஈடுபடுங்கள். வெறும் பணத்திற்காக மட்டும் ஒரு வேலையில் சேராதீர்கள். அதேபோல. கூடுதல் சம்பளம் கிடைக்கிறதே என்பதற்காக வேலையை மாற்றாதீர்கள். எனக்குத் தெரிந்து ஒரு சிலர் நூறு ரிங்கிட் இருநூறு ரிங்கிட் கூடுத லாகக் கிடைக்கிறதே என்பதற்காக நிறுவனம் விட்டு இன்னொரு நிறுவனத்திற்கு வேலை மாறிச் சென்றிருக்கிறார்கள். அது நல்ல பழக்கமல்ல.

ஒரு தொழிலைச் செய்யும்போது அதன் நுணுக்கங்களை நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். அதை வெறும் சம்பளம் தரும் வேலையாகப் பார்க்காமல் நாம் கற்றுக் கொள்ளப் போகும் ஒரு கைத்தொழிலாக – ஒரு நிபுணத் துவப் பயிற்சியாக – அணுகுங்கள். ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கையில் கற்றுக் கொள் வதற்கு நிறைய இருக்கிறது என்ற சிந்தனை யோடு செயல்படுங்கள். பணத்திற்காக மட்டும் உழைப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாதீர்கள். பணம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு கருவி தான். அதுவே எல்லாம் ஆகிவிடாது. அவ்வாறு நீங்கள் செய்தால் எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம். நீங்கள் உங்கள் தொழிலில் சாதனை புரிவதும் நிச்சயம். என்ற நம்பிக்கை வார்த்தைகளோடு நமது நேர்காணலை நிறைவு செய்கிறார் புருஷோத்தமன். அவரின் உழைப்பு, திட்டமிடல், தொழில் மீது கொண்டிருக்கும் பக்தி ஆகிய காரணங்களால் மேலும் பல சிறந்த விருதுகள் அவரையும் அவர் சார்ந்த நிறுவனத்தையும்
எதிர் காலத்தில் தேடி வரும் என்பது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here