கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியதில் மூவர் பலி!

சண்டாகான், ஜனவரி 10 :

ஜாலான் லிந்தாஸ் பத்து சாபியிலிருந்து பத்து லாப்பான் செல்லும் சாலையில், இன்று நடந்த பயங்கர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த மூவரும் ஆண்களாவர். இது தவிர அவர்களின் உண்மையான அடையாளங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட அனைவரும் புரோட்டான் சாகா வகை காரில் பயணம் செய்த போது, அது கட்டுப்பட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது, இதனால் கார் இரண்டாக உடைந்து மோசமாக சிதைந்தது.

இந்த பயங்கரமான விபத்தில், பாதிக்கப்பட்ட இருவர் காரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டதாகவும், மற்றொருவர் காரினுள் சிக்கிக்கொண்டதாகவும், அவர் தீயணைப்பு வீரர்களால் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சண்டாகான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் ஜிம்மி லகுங் கூறுகையில், விபத்து குறித்து தங்களுக்கு காலை 11.40 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே எட்டு தீயணைப்பு வீரர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.

தமது துறையினர் அங்கு வந்தபோது, ​​​​ஒரு புரோட்டான் சாகா கார் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டிருந்தது, அது தானாகவே சறுக்கியதாக நம்பப்படுகிறது.

“அறிக்கைகளின்படி, விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு பொதுமக்களால் மீட்கப்பட்ட இரு பாதிக்கப்பட்டவர்கள் சண்டாகானிலுள்ள Duchess of Kent மருத்துவமனைக்கு (HDOK) அனுப்பப்பட்டிருந்தனர்.

“இதற்கிடையில், மற்றொருவர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவரின் அடையாளங்களும் இதுவரை பெறப்படவில்லை என்றும், பிற்பகல் 12.06 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிந்ததாகவும் ஜிம்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here