ஜோகூர் பாரு, ஜானவரி 17 :
நாளை தைப்பூசத்தை கொண்டாடும் இந்துக்கள் அரசு நிர்ணயித்துள்ள நிலையான இயக்க நடைமுறைகளை ( SOP) முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று ஜோகூர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் இதுபற்றிக் கூறுகையில், கோவிலில் நடைபெறும் ரத ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கோவிட்-19 பரவாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, சுமூகமாக பக்கதர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
“ஜோகூர் மாநிலத்தில் மொத்தம் 26 கோயில்கள் தைப்பூச விழாவை நடத்துகின்றன. அவற்றில் ஏழு கோயில்களில் ரத ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது”.
“இந்த திருவிழா உற்சவம் சுமூகமாக நடைபெறுவதையும், எஸ்ஓபிக்கு முழுமையாக இணங்குவதையும் உறுதிசெய்ய, கோயில் தலைவருடன் காவல்துறை ஒத்துழைக்கும் என்று அந்ததந்த மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
“நாளை தைப்பூச விழாவில் பங்கேற்கும் பக்தர்கள், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும்’ என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
ஸ்கூடாய் அருள்மிகு ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச விழா ஏற்பாடுகளை இன்று நேரில் பார்வையிட்ட பின்னர், அவர் இதனைக் கூறினார்.
இங்குள்ள மாசாய் ஸ்ரீ சுப்பிரமணியர் பரிபாலன சபைக் கோவிலில் தைப்பூச ஏற்பாடுகளையும் கமாருல் ஜமான் பார்வையிட்டார்.
மேலும், நாளை தைப்பூச விழா சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய, கோயில் தலைவருடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஸ்கூடாய் அருள்மிகு ஸ்ரீ பால சுப்பிரமணியர் கோயிலில் நடத்தப்பட்ட ஆய்வில், இன்று பிற்பகல் பக்தர்கள் கோயிலில் மொட்டை அடித்து, தமது நேர்த்திக்கடன் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.