2022 சீனப்புத்தாண்டு: குடும்ப ஒன்று கூடல், விருந்தினர் வரவேற்புகளுக்கு அனுமதி

புத்ராஜெயா, ஜனவரி 19 :

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மிகவும் தளர்வான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை அரசு இன்று அறிவித்துள்ளது. இதில் குடும்ப ஒன்று கூடல், விருந்தினர் வரவேற்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சீனப்புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடும் உணவு (reunion dinner) நிகழ்விற்கு 10 கிமீ சுற்றளவில் வசிக்கும் 15 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று இருந்தது.

இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல், 2022 ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ரீயூனியன் இரவு விருந்தில் பல உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சாதிக் கூறினார்.

அத்தோடு, 2022 சீனப்புத்தாண்டுக்கு விருந்தினர் வரவேற்புகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும். அதுவும் விருந்தினர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுடன், ஒரு நாளில் பல தடவைகள் விருந்தினர் உபசரிப்பை செய்ய முடியாது என்றும் ஹலீமா தெரிவித்தார்.

நிறுவனங்கள் அல்லது சங்கங்களால் ஏற்பாடு செய்யப்படும் சீனப்புத்தாண்டு வரவேற்புகள் ஒரு மண்டபத்திலோ அல்லது உணவகத்திலோ நடத்தப்பட வேண்டும்.

மேலும் பிப்ரவரி 15 அன்று கோவில்களில் சாப் கோ மெய் பிரார்த்தனைகள் SOP களின்படி அனுமதிக்கப்படுகின்றன என்றும் படைப்புத் துறையின் SOP களுக்கு உட்பட்டு சிங்கம் மற்றும் டிராகன் நடனங்களும் அனுமதிக்கப்படுகின்றன என்றார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு சீனப்புத்தாண்டுக்கான SOPகள் கடந்த ஆண்டை விட மிகவும் தளர்வுகளுடன் இருப்பதாக வீ கா சியோங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here