பேராக்கில் ‘ஓப் செலாமாட் 17’ நடவடிக்கையின் முதல் நாளில் 132 விபத்துகள் பதிவு

ஈப்போ, ஜனவரி 29 :

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து ‘Op Selamat 17’ இன் முதல் நாளில் பேராக்கில் ஒரு உயிரிழப்புடன் மொத்தம் 132 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநில போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையின் தலைமை கண்காணிப்பாளர் அஜிசான் ஹாசன் கூறுகையில், கூட்டரசு மற்றும் நகராட்சி சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

இன்று, ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷாவில் போக்குவரத்து நிலைமைகளை சரிபார்த்த பிறகு, “இந்த மரண வழக்கு நேற்று தைப்பிங்கில் நடந்தது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் ‘பாலேக் கம்போங்’ மற்றும் குறுகிய விடுமுறைக்கு செல்வதால் பேராக்கின் பல கூட்டாட்சி சாலைகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது என்று அஜிசான் கூறினார்.

“போலீசார் சாலை விபத்து மற்றும் நெரிசல் ஏற்படுகின்ற 28 முக்கிய இடங்களை அடையாளம் கண்டுள்ளனர், அவற்றுள் தைப்பிங் மற்றும் மாஞ்சோங்கில் (தலா 4 இடங்கள்); கெரியான், பேராக் தெங்கா, ஹிலீர் பேராக் மற்றும் தாப்பாவில் (தலா 3 இடங்கள்); பத்து காஜா, கம்பர் மற்றும் முஅல்லிமில் (தலா 1 இடம்) என்பன குறிப்பிடத்தக்கவை.

கோவிட் -19 காரணமாக நாட்டில் அமலிலிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (எம்சிஓ) காரணமாக இரண்டு ஆண்டுகளாக ‘ஓப் செலாமாட்’ நடவடிக்கை செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், இந்த நடவடிக்கை நேற்று தொடங்கப்பட்டு பிப்ரவரி 6 வரை நடைபெறும்.

வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையில் தமது அதிகாரிகள் 30 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் ஆனால் கூட்டாட்சி சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அஜிசான் கூறினார்.

“எங்கள் கண்காணிப்பின் அடிப்படையில், சீனப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகி வருவதால், நகர மையத்தை (ஈப்போ) நோக்கிய ஒவ்வொரு நுழைவாயிலிலும் நெரிசல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

“இதுபோன்று, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட முக்கிய இடங்கள் (hotspots areas) உள்ள ஒவ்வொரு வழியிலும் போக்குவரத்து அதிகாரிகளை நாங்கள் வைத்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here