பசிபிக் கடலில் பரபரப்பு; அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை விரட்டிய ரஷ்ய போர் கப்பல்!

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் அமெரிக்க நீர் மூழ்கி கப்பலை ரஷ்ய போர் கப்பல் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறியதாவது:-

பசிபிக் கடலில் உள்ள குறில் தீவுகளுக்கு அருகே ரஷ்யாவின் போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்ட போது அமெரிக்க கடற்படையின் வர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பலை ரஷ்ய கடல் பகுதியில் கண்டுபிடித்தது.

அந்த நீர்மூழ்கி கப்பல் தாங்கள் விடுத்த கோரிக்கையை புறக்கணித்ததால் கப்பலில் இருந்த பணியாளர்கள் குழு உடனடி நடவடிக்கையை எடுத்தது. இதனால் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அங்கிருந்து முழு வேகத்தில் சென்றது.

ரஷ்ய கூட்டமைப்பின் எல்லையில் அமெரிக்க கடற்படை நீர் மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here