குவாந்தான், பிப்ரவரி 17 :
நாடு முழுவதும் சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட 455 கால்நடை வளர்ப்பாளர்களுக்கு, மொத்தம் RM5.6 மில்லியன் வெள்ள நிவாரண உதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்துறையின் (MAFI) துணை அமைச்சர் II டாக்டர் நிக் முஹமட் ஜவாவி சாலே தெரிவித்தார்.
வெள்ளப் பேரிடரால் கிட்டத்தட்ட RM11.6 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் முகமாக, அக்ரோஃபுட் திட்ட மறுவளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஒன்பது மாநிலங்களிலுள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவுவதற்காக அரசு இந்த நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்றார்.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை வளப்பாளர்களின் மறுவாழ்வுக்காக அவர்களின் சுமையை குறைக்க இந்த உதவி மூலம் அரசு முயல்கிறது,” என்று அவர் இன்று இங்கு கம்போங் பண்டான் துவாவில் பேரழிவால் பாதிக்கப்பட்ட ஒரு கால்நடை வளர்ப்பாளரின் பண்ணையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் 122 கால்நடை வளர்ப்பாளர்களை உள்ளடக்கிய RM4.8 மில்லியன் மதிப்பிடப்பட்ட அதிகபட்ச இழப்பை பதிவு செய்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து ஜோகூர் (RM2.78 மில்லியன்/124 வளர்ப்பாளர்கள்), பகாங் (RM2.5 மில்லியன்/93 வளர்ப்பாளர்கள்) மற்றும் நெகிரி செம்பிலான் (RM1.05 மில்லியன்/60 வளர்ப்பாளர்கள்) என இழப்பீடுகளை பதிவு செய்தன.
இது சம்பந்தமாக, RM2.3 மில்லியன் உதவித்தொகை சிலாங்கூர், ஜோகூர் (RM1.3 மில்லியன்), பகாங் (RM1.1 மில்லியன்) மற்றும் நெகிரி செம்பிலான் (RM439,380) ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையில், திட்டத்தின் கீழ் வெள்ள நிவாரணத்தை எளிதாக்கும் வகையில் கால்நடை மருத்துவத் துறையில் பதிவு செய்யாத வளர்ப்பாளர்கள் பதிவு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.