நாளை புதிய சமூக ஊடக செயலியை அறிமுகம் செய்கிறார் டிரம்ப்!

வாஷிங்டன், பிப்ரவரி 20:

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.

ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் அடைந்த தோல்வியை ஏற்று கொள்ளாத டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்கள் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ கணக்குகளை முடக்கின.

டொனால்டு டிரம்பின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து டிரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது. ஆனால், பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக மூடாமல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இதன்பின்னர், டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்படி டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் டிரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், புதிய சமூக ஊடக செயலி ஒன்றை அறிமுகப்படுத்த அவர் திட்டமிட்டு உள்ளார். ட்ரூத் சோசியல் என்ற பெயரிலான இந்த செயலியானது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்-ஸ்டோரில் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான சோதனை கட்டம் கடந்த வெள்ளி கிழமை நடைபெற்றது. அதில், அந்த நெட்வொர்க்கின் தலைமை தயாரிப்பு அதிகாரியான பில்லி பி என்பவர், மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அதில், இந்த செயலி எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆப்பிள் ஆப்-ஸ்டோரில் திங்கட்கிழமை (பிப்ரவரி 21ல்) இந்த செயலியை வெளியிட திட்டமிட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.

டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் செயல்பட டிரம்புக்கு விதிக்கப்பட்ட தடை ஓராண்டை கடந்த நிலையில், சமூக ஊடகத்தின் வழியே மீண்டும் அவர் மக்களிடையே தோன்ற உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here